தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் நிலைப்பாடு குறித்து, ‘பேரமெல்லாம் நடக்கிறது’ என்று தகவல்கள் வெடித்துக் கிளம்பும் நிலையில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. உமாமகேஸ்வரி, தன்னுடைய கணவர் ரகுபதியின் முகநூல் பக்கத்தில் ‘துரோக ஆட்சி’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்களுக்கான ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக அம்மா அவர்களின் பேரன்பினால் மக்கள் பணியாற்ற விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராகும் பெரும் பாக்கியத்தைப் பெற்றேன்.
அம்மாவின் 30 ஆண்டுகால உறவாகவும் அஇஅதிமுகவின் நீண்டகால வரலாற்றில் அம்மா அவர்களோடு இணைந்து ஈடு இணையற்ற தியாகப்பணியைத் தொடர்ந்ததாலும் தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் தலைமையில் கட்சிப் பணியாற்றுவதும், அம்மாவின் ஆட்சி சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலோடு தொடர்வதும் தான் சரியானது என முடிவெடுத்தேன். துரோக ஆட்சியில் இருந்திருப்பேனேயானால் மக்கள் பணியை சிறப்பாக ஆற்ற முடியாது என ராஜினாமா செய்திருப்பேன். இதயதெய்வம் அம்மாவின் நல்லாட்சி அமைந்திட ஆட்சி தலைமை மாற்றம் ஏற்படுவதே சரியாக இருக்கும். துரோகிகளின் நயவஞ்சக தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக மனுவை வாபஸ் பெருவதன் மூலம் இந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கருதவில்லை. 18 பேருமே வாபஸ் பெற்றாலும் கூட தேர்தல் நடத்த முற்றுப்பெறாத தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில் நீதிமன்றம் உத்தரவிட வாய்ப்பு இருப்பதாகவும் கருதவில்லை. பெரும்பான்மையில்லாத ஆட்சியை கையில் வைத்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காகவும், அப்போது இடைத்தேர்தல்களை நடத்த மத்திய அரசு திட்டமிடுவதாகவுமே அரசியல் செய்வதாக யூகிக்கிறேன்.
அம்மா அவர்களின் ஆசியுடன் சட்டபடி வெற்றியை பெருவோம் ஜனநாயகத்தில் சட்டம் தவறாகும் பட்சத்தில் கழகத்தின் தியாக வீரர்களுடன் மக்கள் பேராதரவுடன் வென்றெடுப்போம்.
இவ்வாறு கூறியிருக்கிறார் உமாமகேஸ்வரி.