வங்கிக் கடன் தவணை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை வரை நீட்டிக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வங்கிக் கடன்களுக்கான தவணை தொகைகளை மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கு செலுத்தாமல் மூன்று மாதங்கள் கழித்து செலுத்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 27 -ம் தேதி அறிவித்திருந்தது.
இந்தக் கால அவகாசத்தை ஜூலை வரை நீட்டிக்க கோரி திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஊரடங்கு உத்தரவால் தெரு வியாபாரிகள் முதல் பெரிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் வரை 90 சதவீதம் பேர் வருமானமின்றி தவிக்கின்றனர் எனவும், அவர்களுக்கான உதவிகள் போதுமானதாக இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
உரிய விவரங்கள் இல்லாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு தெரிவித்ததைத் தொடர்ந்து, மனு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன், புதிதாக உரிய விவரங்களுடன் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த புதிய மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பங்களிப்பை வழங்கினார் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுவிலும் எந்த விவரங்களும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அத்துடன், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டனர்.