பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சில வாரங்களுக்கு முன்பு அதிரடியாகக் குறைத்தது. அதன்படி, பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை வைத்தார். பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைக்காவிட்டால் தமிழக பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்த அவர், கூறியது போலவே நேற்று கோட்டையை முற்றுகையிட முயன்றார்.
ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவரை மேலும் செல்ல விடாமல் செய்தனர். பேரணிக்கு முன்பு பேசிய அண்ணாமலை தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். குறிப்பாக இந்த ஆட்சியே 750 நாட்கள்தான் இருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று திருச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் வழக்கம் போல் திமுக அரசை கடுமையாகத் தாக்கிப் பேசினார். அப்போது பேசிய அவர், " தமிழக அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் தமிழக அரசின் செயல்பாடு மிக மோசமாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இரண்டு துறைகளில் நடைபெற்ற ஊழல் புகார்கள் தொடர்பான கோப்புக்களை வெளியிட உள்ளேன். பிரதமர் முன்பு பொய்யான தரவுகளைப் பேசி தமிழ்நாட்டுக்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளார் நம்முடைய முதல்வர். பதவிக்கு வருவதற்கு முன்பு மத்திய அரசு, பதவிக்கு வந்த பிறகு ஒன்றிய அரசா? மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை" என்றார்.