Skip to main content

குடும்ப அட்டை பெற ரூ.500 லஞ்சம் பெற்ற ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது!!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

accepting Rs 500 bribe to get family card

 

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை பெற ரூ.500 லஞ்சம் பெற்ற ஒரு ஊழியர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் உடையார்குடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் ஹாஜா மொய்தீன் என்பவர் குடும்ப அட்டை கோரி கடந்த 10 தினங்களுக்கு முன்பு இணையதள வழியாக விண்ணப்பித்துள்ளார். புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்காமல் வட்ட வழங்கல் துறை வேலை செய்யும் வருவாய் உதவியாளர் மணிமாறன் ( 58) மற்றும் அதே பிரிவில் அதிகாரியின் அனுமதி இல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இடைத்தரகராக வேலை செய்யும் வீராண நல்லூரைச் சேர்ந்த சாமிதுரை மகன் ராஜசேகர்(49)  ஆகிய இருவரும் செல்போனில் ஹாஜா மொய்தீனிடம்  தொடர்பு கொண்டு புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் வழங்க ரூ 500 பணம் வேண்டும் என கேட்டுள்ளனர்.

 

ஹாஜாமொய்தீன் செல்போனில் அவர்கள் பேசியதை பதிவு செய்து கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அனுப்பினார்.  இதனடிப்படையில் ஊழல் தடுப்பு காவல்துறையின் அறிவுரையின் பேரில் ஹாஜா மொய்தீன் வெள்ளிக்கிழமை மதியம் வட்ட வழங்கல் பிரிவுக்கு சென்று அங்கு இடைத்தரகராக இருந்த  ராஜசேகர் என்பவரிடம் புதிய குடும்ப அட்டை பெற ரசாயன பவுடர் தடவிய ரூ. 500-ஐ லஞ்சமாக கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை ராஜசேகர் வாங்கி அருகில் இந்த வருவாய் உதவியாளர் மணிமாறன் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர்  மெல்வின் ராஜ் சிங் தலைமையில் ஆய்வாளர் மாலா மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கரோனா பரிசோதனைக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்