கோவை மாவட்டம் தேவராயபுரத்தில் நேற்று முன்தினம் நடத்திய திமுக கிராமசபைக் கூட்டத்தில், அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்ணை நோக்கி 'நீங்கள் அமைச்சர் வேலுமணி அனுப்பிய நபர் தானே' என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினர். பின்னர் அந்தப் பெண் வாக்குவாதத்தில் ஈடுபடச் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இந்தச் சம்பவத்தை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கும் வார்த்தைப் போர் நீடித்தது.
"எல்.இ.டி பல்ப் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதை நிரூபித்தால் அமைச்சர் வேலுமணி அரசியலை விட்டு விலகத் தாயாரா?" என ஸ்டாலின் கேள்வியெழுப்பியிருந்தார். அதேபோல் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி, "பட்டியல் இனப்பெண் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது. ஸ்டாலின் மக்கள்சபைக் கூட்டம் நடத்துகிறார். அதுவும் 2,000 ஆண்டு பழமையான கோவிலை மறித்துக் கூட்டம் போட்டுள்ளார்கள். கேள்வி கேட்கும்பொழுது பொறுமையாகப் பதில் சொல்லலாம். ஆனால், அதற்காக கட்சிக்காரர்களை விட்டு தாக்கவைத்தது மிகவும் தவறு" எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கோவையில் அதிமுக விழா ஒன்றில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''அதிமுகவிற்கு சோதனை வந்த நேரத்தில், ஜெயலலிதா இறந்த நேரத்தில், ஆட்சி சின்னாபின்னாமாகிவிடுமோ என அதிமுகவே தள்ளாடிய நேரத்தில், ஆட்சியை அமைப்பதற்கு ஊன்றுகோளாக இருந்து தாங்கிப்பிடித்தவர்கள் வேலுமணியும், தங்கமணியும். எனவே இவர்களின் மக்கள் செல்வாக்கை தகர்ப்பதற்கு என்ன வழியென்று சொல்லி கோவை தொண்டாமுத்தூரில்வந்து களமிறங்கியிருக்கிறார்கள்" எனப் பேசினார்.