கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் விவசாய கடன்களைப் பெற்றுவருகிறார்கள். அதேபோல் விவசாயிகளும், அப்பகுதி கிராம மக்களும் தங்களின் அவசர தேவைக்காக தங்களுக்கு சொந்தமான தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுவருகின்றனர்.
அப்படி அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக சங்க அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்தித்து, பொதுமக்களும், விவசாயிகளும் கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கையில் பணத்துடன் சென்று தாங்கள் அடகு வைத்த நகையை மீட்க வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டபோது சங்கத்தின் அலுவலர்கள், அடகு வைத்த நகையை ஏலம் விட்டு அதை விற்பனை செய்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நகையை அடமானம் வைத்த விவசாயிகளும் பொதுமக்களும் ஒன்று திரண்டு, ‘எங்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பாமல், தகவல் தெரிவிக்காமல் எப்படி நகையை ஏலம் விட்டு விற்பனை செய்வீர்கள்’ என்று கேட்டு அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வேளாண்மைக் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நகை அடமானம் வைத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விரைவில் விசாரணை செய்து நகைகளைப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர். அதில் சமாதானம் அடைந்த விவசாயிகளும், பொதுமக்களும் சாலை மறியலைக் கைவிட்டனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க அலுவலர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளாக சுமார் 200 முதல் 500 பவுன் நகைகள் அந்தத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நகைகளை சங்க ஊழியர்கள், முறையான அறிவிப்பின்றி ஏலம்விட்டு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தீவிர ஆய்வு நடத்திவருவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.