![8](http://image.nakkheeran.in/cdn/farfuture/E8hfDz9SwUuqvUHC-3psIBSm4NQ608Aa0VE5ROo2Jf0/1533347648/sites/default/files/inline-images/eight%20way.jpg)
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை கருத்துக்கேட்பு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. விவசாயிகள் வாக்குவாதத்தால் அதிகாரிகள் பாதியிலேயே வெளியேறினர். இதனால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
பசுமை சாலைகளை அமைப்பதால் எங்களுக்கு என்ன பயன்?, விலை நிலங்களை விட்டுத்தர மாட்டோம். நிவாரணம் தேவையில்லை. இயற்கையான விவசாயத்தை அழித்துவிட்டு பசுமை சாலையா என விவசாயிகள் கேள்வி எழுப்பி, அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தபோதும் அதை ஏற்காது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். இதனால் அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு 10 ஆயிரம் கோடி மதிப்பில் 274 கி.மீ. தூரத்திற்கு 8 வழி விரைவு சாலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக இந்த சாலை சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 7500 ஏக்கர் விளை நிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 6 ஆறுகள், 8 மலைகள், குடியிருப்புகள், பள்ளிகூடங்கள், 100-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்களும் அழியும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொதுமக்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திரண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
இதையடுத்து விவசாயிகளை திரட்டி இன்று அவர்களின் புகார்கள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் வெளியேறியதால் கூட்டமும் பாதியிலேயே நின்றது.