Skip to main content

சசிகலா விவகாரம்; கட்சி கூட்டத்தில் கொந்தளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021
"Who is that Sasikala?" - AIADMK ex-minister sensational speech

 

முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சண்முகம் சமீப நாட்களாக அவ்வப்போது சசிகலா குறித்து பரபரப்பான பேட்டிகளைக் கொடுத்துவருகிறார். இந்த நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டத்தை நேற்று விழுப்புரம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் கூட்டினார் சிவி சண்முகம். அந்தக் கூட்டத்தில் அவர் பேசும்போது, “திமுகவின் வெற்றி போலியானது. அது உண்மையான வெற்றி கிடையாது. இந்த முறை நமது கட்சி ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதற்காகத் தொண்டர்கள் யாரும் சோர்ந்து விட வேண்டாம்.

 

தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். தொண்டர்கள் கவனமாக இருந்து செயலாற்ற வேண்டும். எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை கூறியதாக சசிகலா சொல்கிறார். யார் அந்த சசிகலா? 1973 ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். அப்படிப்பட்ட சசிகலா எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை கூறினேன் என்று சொல்வதை உண்மையான அதிமுக தொண்டர்கள், எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யார் யாரோ எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடிப் பார்த்துவிட்டனர்.

 

ஆனால் எம்.ஜி.ஆரின் ஒரே சொத்து இரட்டை இலை, அதிமுக மட்டும்தான். நம் இயக்கம், ஒன்றரை கோடி தொண்டர்களை உள்ளடக்கியது. எனவே அதிமுகவை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதே போல் வரும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்து அதில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும்” என்று பேசினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திண்டிவனம் எம்.எல்.ஏ அர்ஜுனன், வானூர் எம்.எல்.ஏ சக்கரபாணி, முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்ச் செல்வன், இளைஞர் அணி பசுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்