Skip to main content

கை சின்னம் வேண்டும்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தனித்தனி வேட்புமனுத் தாக்கல்

Published on 31/01/2023 | Edited on 31/01/2023

 

Congress; Three candidates from the same family have filed nominations to compete in the hand symbol

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான திமுக அதன் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியது. அதன் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். அவரோடு திமுகவினரும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

 

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என கோஷ்டி யுத்தமும்., அதைத் தொடர்ந்து கூட்டணி குழப்பம்; வேட்பாளர் தேர்வு; கட்சி சின்னம் இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு வராத சூழ்நிலையில் தேர்தல் பணிக்குழு மட்டும் அறிவித்து களத்தில் இருப்பதாக அதிமுக காட்டிக் கொண்டாலும் ஒரு சுறுசுறுப்பு எதுவும் தெரியவில்லை. இரண்டாவது கட்சியாக தேமுதிகவும் மூன்றாவது கட்சியாக அமமுகவும் வேட்பாளரை அறிவித்தது. தொடர்ந்து நான்காவது கட்சியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தது.

 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மூன்று சுயேச்சைகள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதன்படி, ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி(45), அவர்களது ஒரே மகள் சத்யா (24) என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்திருந்தனர்.

 

இது குறித்து மாரியப்பன் கூறும் போது, “நான் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்ட அமைப்பாளராக உள்ளேன். எனது மனைவி துணை அமைப்பாளராக உள்ளார். எனது மகள் பி.ஏ.பி.எட். முடித்து உள்ளார். நாங்கள் குடும்பத்தினருடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளோம். 

 

ஏற்கனவே இங்கு கை சின்னத்தில் வேட்பாளர் உள்ளார். தேர்தல் நடத்தும் அலுவலர் எங்களுக்கு என்ன சின்னம் ஒதுக்குகிறாரோ அதில் நாங்கள் போட்டியிடத் தயாராக இருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கின்றோம்” எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்