திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்.
அப்போது அவர், பா.ஜ.கவிற்கு 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 35 சதவீத வாக்குகள் தான் பெற்றன. இருந்தபோதும் பாராளுமன்றத்தில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதன் காரணமாக குருட்டுத்தனமாக அவர்கள் நினைக்கும் சட்டத்தை நிறைவேற்றுகிறார்கள். விவாதங்கள் சடங்கிற்காகவே நடத்துகின்றனர். அதனடிப்படையில் தான் வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றினார்கள்.
இந்த சட்டத்தால் பல பிரச்சனைகள் உள்ளன. பெருமுதலாளிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் எதிரானது. அதனால் விவசாயிகள் தாமாக முன் வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நடத்தும் போராட்டம் உள்ளப்பூர்வமான போராட்டம்.
தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். விவசாய சந்தைகளை அதிகப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என அப்போது தெரிவித்தோம். ஆனால் பா.ஜ.க அரசு அதை செய்யாமல் பல படிநிலைகளை தவிர்த்து விட்டு தற்போது உள்ள சட்டத்தை நிறைவேற்றுயுள்ளார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டும் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் காங்கிரஸ் கொண்டுவந்தது குறித்து படிக்க வேண்டும். அவர் விவாதம் செய்ய விரும்பினால் காங்கிரஸ் கட்சி சார்பில் விவாதம் செய்ய தயாராக உள்ளோம்.
சூரப்பா விவகாரத்தில் பல மர்மங்கள் நிலவுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவரை தான் துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் சூரப்பாவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக அவர் மீது விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. தமிழக ஆளுநர் ஜனநாயகத்திற்குட்பட்டு செயல்படுவதில்லை. அவர் வரம்பு மீறி செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு அழகல்ல.
2 ஜி என்கிற ஒரு பூதத்தை திடீரென கிளப்பினார்கள். அப்படிப்பட்ட பூதம் இல்லை என நீதிமன்றமே கூறி விட்டது. தற்போது மீண்டும் தமிழக முதலமைச்சர் செத்து போய் மண்ணில் புதைத்த பூதத்தை கிளப்புகிறார். அந்த பூதம் என்பது ஒரு மாயை. முதலமைச்சர் நான்காண்டுகள் என்ன செய்தார் என்பதை கூறாமல் செத்த பூதத்தை கிளப்புகிறார்.
ரஜினி கட்சி ஆரம்பிப்பேன் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பு வந்த பின்பு, கட்சி ஆரம்பித்த பின்பு அது குறித்து பேசலாம். கமல்ஹாசன் தமிழ்நாட்டு அரசியலில் கவனிக்கத்தக்க நபர் இல்லை. தமிழ்நாட்டில் தற்போது அ.தி.மு.க வும், தி.மு.க கூட்டணியும்தான் முதன்மையானது.
கமல் போன்றோர் ஊடக வெளிச்சத்திற்காக இதை செய்கிறார்கள். அவர்கள் தேர்தலில் தி.மு.க அல்லது அ.தி.மு.க அணியுடன் இணைய வேண்டும். கமல்ஹாசன் இதுவரை கூறி வந்த சித்தாந்தம் பா.ஜ.க விற்கு எதிரான சித்தாந்தம். அவர் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அரசியல் செய்கிறார். கமலின் மனசாட்சிப்படி அவர் அரசியல் இருக்க வேண்டுமென்றால் அவர் திரும்ப வேண்டிய இடம் காங்கிரஸ் கட்சி. ஆனால் காலச்சக்கரம் எப்படி சுழல்கிறது என தெரியவில்லை.
ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி அமைக்கலாம், தனித்து நிற்கலாம் ஆனால் முதலில் அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும், அவர் நிலைப்பாட்டை பொறுத்தே எதையும் கூற முடியும். அவர் அறிவிப்பு திடீர் அறிவிப்பு, அந்த அறிவிப்புக்கு பின்னால் சிலர் இருக்கிறார்கள். ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சி பா.ஜ.கவின் கட்சி, அதை இயக்க போவதும் பா.ஜ.க தான் என்றார்.