Skip to main content

‘மதுக்கடைகளை மூடுவது குறித்து முதல்வர் தெரிவித்தது என்ன?’ - திருமாவளவன் எம்.பி. பேச்சு!

Published on 02/10/2024 | Edited on 02/10/2024
Thirumavalavan MP Speech about What did the CM say about the closure of liquor shops

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று (02.10.2024) நடைபெற்றது. தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய அளவில் மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டினை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த மாநாட்டில் அக்கட்சியின் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார். மேலும் 13 தீர்மானங்களை வாசித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், “இந்த மாநாடு விசிக வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். அகில இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிற ஒரு மாநாடு. மதுவிலக்கு என்பதுதான்  புதிய கோரிக்கை அல்ல. புத்தர் காலத்தில் இருந்து இந்த கொள்கை பேசப்பட்டு வருகிறது. திடீர் என திருமாவளவன் மது ஒழிப்பு குறித்துப் பேசுகிறார் எனப் பேசுகிறார்கள். விசிகவினர் சாதி மற்றும் மத பெருமை பேசுபவர்கள் அல்ல. புத்தர் பெருமை பேசுபவர்கள். இந்த மாநாட்டில் கவனிக்க வேண்டியது ஒன்று. இதுவரை விசிக பயன்படுத்தாத ஒருவரது படம் காந்தி, மற்றொருவர் ராஜாஜி. மது வேண்டாம் எனச் சொல்லும் அனைத்து தலைவர்களின் வாழ்த்தும் இந்த மாநாட்டிற்குத் தேவை. அரசியலுக்காக இதனைப் பயன்படுத்தவில்லை. காந்தியின் கொள்கையில் பலவற்றில் முரண்பாடு உண்டு. ஆனால் உடன்பாடுள்ள இரண்டு கொள்கை மதுவிலக்கும், மதச்சார்பின்மையும் ஆகும்.

Thirumavalavan MP Speech about What did the CM say about the closure of liquor shops

மதுவிலக்கு இந்தியா முழுமைக்கும் வேண்டும். எந்த மகானும் மதுவை ஆதரித்ததில்லை. மதுவை ஏற்காத ஒரு மார்க்கம் உண்டென்றால் அது இஸ்லாம். திருவள்ளுவர் கள்ளுன்னாமை எனும் அதிகாரத்தை எழுதியுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 47 பிரிவு மது ஒழிப்பு பற்றி வலியுறுத்துகிறது. இதனைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால் நான் தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டாம் எனக் கூறிவிட்டார் எனச் சிலர் ஊடகங்களில் பேசத் தொடங்கிவிட்டார்கள். இந்த நாட்டை சாதி, மத வெறியர்களிடம் காப்பாற்ற வேண்டும். மதுப் பழக்கத்திற்கு ஆளானால் மனித வளம் அழிந்துவிடும். இந்த மாநாட்டில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல் கணக்குகள் பேச வேண்டாம் எனக் கூறினேன். ஆனால் திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுகிறார் என ஊடகங்களில் பேசினார்கள். இந்த மாநாட்டின் காரணமாகப் போதைப் பொருளை ஒழிக்க முடியுமா, இல்லையா என ஊடகங்கள் விவாதம் செய்திருக்க வேண்டும். ஆனால் அதனைத் தவிர்த்து மற்ற விசயங்கள் பேசப்பட்டன.

வரும் 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. ஆனால் 2026 தேர்தலுக்கு இப்போதே அடிபோடுகிறோம் என இந்த மாநாட்டின் நோக்கத்தை மடைமாற்றினார்கள். சாதி, மத பிரச்சினைக்குத் தேசிய பார்வை வேண்டும். அப்படித்தான் மது ஒழிப்புக்கும் மதுவுக்கும் தேவை. அதானி விமானநிலையம், துறைமுகங்களில் கோடிக்கணக்கான ரூபாய் அளவில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு நம் குக்கிராமங்களிலும் போதைப் பொருள் கிடைக்கிறது.

Thirumavalavan MP Speech about What did the CM say about the closure of liquor shops

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடமும் போதைப் பொருள் பழக்கம் உள்ளது. இந்த மாநாட்டிற்கு திமுகவை எப்படி அழைக்கலாம், திமுக அரசு தானே நடக்கிறது. திமுக அரசு தானே கடைகளை நடத்துகிறது எனப் பேசுகிறார்கள். அப்படி இருக்கும் சூழலில் திமுக கலந்துகொள்வது விசிகவின் வெற்றி. மது ஒழிப்பில் திமுகவுக்கும் உடன்பாடு உண்டு. மதுவிலக்கு குறித்து மோடியிடம் ஏன் கேட்கிறார் எனக் கேட்கிறார்கள். தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்பதும், தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையைக் கொண்டு வேண்டும் என்பது தான் விசிகவின் கோரிக்கை. கடந்த 1971இல் கலைஞர் மதுக்கடைகளை திறந்தது உண்மைதான். ஆனால் 1974ஆம் ஆண்டு கலைஞர் மதுக்கடைகளை மூடினார். அதன் பிறகு மதுக்கடைகளைத் திறந்தது யார், டாஸ்மாக்கை உருவாக்கியது யார்?. இதனை யாரும் பேசுவதில்லை. ஜெயலலிதா ஆட்சியில் அரசே நடத்தலாம் எனச் சட்டம் கொண்டு வந்தார்.

மதுக்கடையை மூட வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கும் உள்ளது எனத் தனிப்பட்ட முறையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதறியப்படியே என்னிடம் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுக்கடைகளை மூடினால் 2026இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். மதுக்கடை மூடினால் விசிகவின் வெற்றி. மக்களின் வெற்றி. தேசிய மதுக்கொள்கையை உருவாக்கச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனப் பேசினேன். தேர்தல் அரசியலே வேண்டாம் என சமூக இயக்கமாக நடத்துவதற்கு தயாராவானே தவிர. முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன். என் கைகள் சுத்தமாக உள்ளன. காந்தியை அவமதித்துவிட்டார் எனத் தமிழிசை பேசுகிறார். எனக்குக் குடிப்பழக்கம் இருக்கும் என்ற தொனியில் தமிழிசை பேசுகிறார். தமிழிசை உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என நம்புகிறேன். உங்களைப் போலத்தான் நானும் குடிப்பழக்கம் இல்லாதவன்.

Thirumavalavan MP Speech about What did the CM say about the closure of liquor shops

காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் உள்ளோம். என்னைக் குறித்து யார் என்ன சொன்னாலும் அதனைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்கக் காந்தி விரும்பியதால் தான் நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக்கொன்றார். அதாவது ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர் சுட்டார். காரணம் மதச்சார்பின்மை என்பதுதான். அதனால் தான் காந்தி பிறந்தநாளில் இந்த மாநாட்டை நடத்துகிறோம். ராஜாஜிக்கு ஏன் பேனர் வைத்தோம். ராஜாஜி ஒரு பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர். 1937இல் சேலத்தின் நகராட்சி தலைவராக இருந்தபோது ராஜாஜி மதுக்கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை. அதனால் தான் மாநாட்டில் பேனர் வைத்துள்ளோம். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இரு கோரிக்கை எங்கள் தீர்மானங்களைக் கோரிக்கையாக ஏற்று அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீமன் நாராயணன் கமிட்டியின் பரிந்துரையைத்தான் விசிகவின் கோரிக்கையாக வைக்கிறோம். பிரமர் மோடியே அதனை நடைமுறைப்படுத்துங்கள். இந்துக்கள் தான் அதிகம் குடிக்கிறார்கள். இஸ்லாமியர்களின் 99 சதவீதம் பேர் குடிப்பதில்லை. ஆனால் இந்துக்களில் எத்தனை பேர் குடிக்கிறார்கள். இந்து சமூகத்தை பாதுகாக்க மோடி, அமித்ஷாவுக்கு அக்கறை இருக்கிறதா இல்லையா. தேசிய அளவில் மதுவிலக்கைக் கொண்டு வாருங்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதும், தேசிய மதுக்கொள்கையை கொண்டு வரச் சொல்வதால் வேறுபாடு புரியவில்லை. மோடி அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன் இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவரவேண்டும்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்