What's wrong with asking about caste Minister question

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி (23.07.2024) தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் மக்களவையில் ஜூலை 30 ஆம் தேதி பாஜகவைச் சேர்ந்த எம்.பி. அனுராக் தாகூர் பேசுகையில்,“சாதி என்னவென்று தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கேட்கிறார்கள்” எனப் பேசினார். அனுராக் தாகூரின் இந்த பேச்சு ராகுல் காந்தியைக் குறிப்பிடும் படி இருப்பதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. இதற்கிடையே பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இளம் மற்றும் ஆற்றல் மிக்க நாடாளுமன்ற உறுப்பினரான அனுராக் தாகூரின் பேச்சை அவசியம் கேட்க வேண்டும். உண்மை மற்றும் நகைச்சுவையின் சரியான கலவை ஆகும். இந்த பேச்சு இந்தியாக் கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலளித்துப் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து அனைவரின் சாதி குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவரது சாதியைக் கேட்பதன் மூலம் நாட்டை பிளவுபடுத்தக் காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்திக்கும்போது ​​அவர் செய்தியாளர்களின் சாதியைக் கேட்கிறார். ராணுவம் மற்றும் ஆயுதப்படை வீரர்களின் சாதியைக் கேட்கிறார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது மக்களின் சாதியைக் கேட்கிறார். மற்றவர்களின் சாதியை ராகுல் காந்தி கேட்கலாம். ஆனால், அவரின் சாதியை யாரும் கேட்கக் கூடாதா?. எனவே ராகுல் காந்தியின் சாதியைக் கேட்பதில் என்ன தவறு உள்ளது” எனக் கேள்வி எழுப்பினார்.