
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொள்ளாதது; ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது; அண்மையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் உடனான காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் நான்கு மணி நேரம் காத்திருந்தும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாமல் மௌனம் காத்தது என நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுற்றிச் சுழன்று வருகிறது எடப்பாடி- செங்கோட்டையன் இடையேயான பனிப்போர்.
நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் யூடியூப் சேனல் நடத்திய விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். நிகழ்வில் செங்கோட்டையன் பேசுகையில், ''ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை அனைவராலும் உணர முடியும்.

இன்றைக்கும் நான் அதிமுக தொண்டனாக இருக்கிறேன். நான் தலைவன் அல்ல. என்னைப் பொறுத்தவரை உங்களுக்கு தெரியும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரு வரி கூட தவறாக நான் பேசியதே இல்லை. முகம் சுளிக்கும் அளவிற்கு நான் வார்த்தைகளை அள்ளி வீசியதில்லை. என் லட்சியம் உயர்வானது; என் பாதை தெளிவானது; வெற்றி முடிவானது. மகாகவியின் வார்த்தையைப் போல 'சில வேடிக்கை மனிதர்களை போல நான் வீழ்ந்துவிட மாட்டேன்' என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.

இந்நிலையில் செங்கோட்டையனின் பேச்சுக்கு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பதில் கொடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகை செல்வன் பேசுகையில், ''இது தனிப்பட்ட விஷயம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லிவிட்டார். செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. ஆகவே அவருக்கு என்ன பிரச்சனை என்று அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அதிமுக, தொண்டர்களால் இயங்கும் இயக்கம். இதில் ஒன்றிரண்டு பூசல்கள் இருக்கும்; கசப்புகள் இருக்கும்; மன வேறுபாடுகள் இருக்கும். ஆனால் வேறுபாடுகளாலும் மனவருத்தங்களாலும் அதிமுகவை விட்டுப் போனவர்கள் எப்படிப்பட்ட நிலைக்குப் போனார்கள். காணாமல் போய்விட்டார்கள். சொந்த அண்ணன் தம்பிக்குள் பிரச்சனை என்றால் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு என்ன பிரச்சனையோ அதை பொதுச் செயலாளரை சந்தித்து சொல்ல வேண்டும். அதை விடுத்து பொதுவெளியில் இப்படி நடந்து கொள்வது அநாகரீகமான செயல்'' என்றார்.