
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடியில் தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் மூலம் மொத்தமாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென்று நேற்று நள்ளிரவு ஒன்று மற்றும் இரண்டாவது அலகில் குளிரூட்டும் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் இருந்த மின் வயர்கள் எரிந்து நாசமாகின. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலேயே உள்ள தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து போராடியும் தீயை அணைக்க முடியாததால் நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, கன்னியாகுமரி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தில் தீயை அணைக்க போதிய நவீன கருவிகள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து நவீன கருவிகளைக் கொண்டு வந்து தீயை அணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இரண்டு தீயணைப்பு வீரர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பல மணி நேரமாக தீப்பற்றி எரிந்து வருவதால் அங்கு கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அனல் மின் நிலையத்தின் மூன்று அலகுகளில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.