ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மு.அகல்யாவை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், முல்லைக்காடு , தங்கபாரதி திரையரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம், புதியம் முத்தூர் கடைவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
![seeman](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ed66wE0CfhaDLgiKagZBhdGh1tcCJD8MqzvExAWC2nI/1557141364/sites/default/files/inline-images/s21_1.jpg)
பரப்புரையில் சீமான், தமிழகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் பெயருக்கு தான் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்து இருந்தால், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருக்க மாட்டார். தற்போது அ.தி.மு.க.வை மிரட்டி பா.ஜனதா கூட்டு வைத்து உள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ஊழல் ஒழியும், லஞ்சம் ஒழியும், கருப்பு பணம் வெளியே வரும் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. பயங்கரவாதம் ஒழியும் என்றார்கள். ஆனால் தற்போது வரை பயங்கரவாத தாக்குதல் நடந்து வருகிறது.
ஜி.எஸ்.டி.யில் தங்க பிஸ்கட்டுக்கு 3 சதவீதம் வரியும், மக்கள் சாப்பிடும் பிஸ்கட்டுக்கு 18 சதவீதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். முட்டை கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்து உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்றால் இது போன்ற ஊழல் தொடரும்.
தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு தி.மு.க. தான் முழு காரணம். தி.மு.க.வை ஒழித்துவிட்டால் அ.தி.மு.க. ஒழிந்து விடும். தமிழகம் கறை படுவதற்கு முழு முதல் காரணம் தி.மு.க. தான். அவர்களிடம் படித்து வந்தவர்கள் தான் அ.தி.மு.க.வினர். தமிழகத்தில் அ.தி.மு.க. அதிகபட்சமாக 1½ ஆண்டுகள் மட்டுமே இருக்கும். அதன் பிறகு வரலாற்றில் அ.தி.மு.க. இருக்காது.
தமிழகத்தில் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. அனைவரும் தான் இருக்கும் போதே தனது வாரிசுகளுக்கு இடம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு பணம் கொடுக்க தான் தெரியும். மக்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளமாட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு பேசினார்.
![seeman](http://image.nakkheeran.in/cdn/farfuture/nj8gX8r9wm3kKwC_0IXmJM6jtz79hZ8QtanKXdnmvEk/1557141380/sites/default/files/inline-images/s22_1.jpg)
முன்னதாக அயோத்திதாசர் நினைவுநாளையொட்டி மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.