
அண்மைக் காலமாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஓரிரு தினங்களுக்கு முன்பு நாதகவின் மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் தற்போது, நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராயப்பனும் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “15 ஆண்டுகளாக, நாம் தமிழர் கட்சி களப்பணிகளிலும், கட்சியின் மாவட்ட, தொகுதி போன்ற பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ளேன்.கட்சியின் சார்பாக நடந்த ஐபிஎல் க்கு எதிரான போராட்டத்தில், சிறைக்கும் சென்று இருக்கிறேன். கட்சியின் மீதும், தமிழ்த் தேசியத்தின் மீதும் கொண்ட ஆர்வத்தால், எனது வாழ்வாதாரமாக, மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து கொண்டு இருந்த நான், என்னுடைய வேலையும் விட்டுவிட்டு முழுநேரத் தமிழ்த் தேசிய அரசியலில் பணியாற்றி வந்தேன்.
அதுமட்டுமின்றி, அலுவலகங்களில் பிற இயக்கத்தினர் தாக்குதல் நடத்தும் போதும், முன் நின்று எதிரிகளை, எதிர்கொண்டு இருக்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியை. இதுவரை சிறப்புரக் கட்டமைத்து வந்திருக்கிறேன். அப்படி இருக்கையில் கடந்த சில ஆண்டுகளாக நமது கட்சியில் சமூக நீதியற்ற நிலைப்பாட்டைக் காண்கிறேன். இதனால், மிகுந்த மன வருத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறேன்.
நீ சாதியைப் பார்த்துப் போடுகிற ஓட்டு, எனக்கு தீட்டு!, நீ தாழ்த்தப்பட்டவன் என்றால், உன்னை தாழ்த்தியவன் யார்? என்ற, உங்கள் மேடைப் பேச்செல்லாம் கேட்டு, கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு, இந்த கட்சியில், களப் பணியாற்றி வந்தேன். ஆனால், அந்தப் பேச்சுக்கள் தற்போது, வெறும் மேடைப் பேச்சாக மட்டுமே மாறியிருக்கிறது.
நமது கட்சியின் கட்டமைப்பில், பலமானச் சாதியப் பாகுபாடு உள்ளது. இதுவரைக் கட்சிக்கு வேலை செய்து, கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்தவர்களை, சாதியின் அடிப்படையில் விலக்கி, கட்சிக்காக எந்த ஒரு பணியும் செய்யாத தன் சமூகமே பெரிதென்று இருக்கிறவர்களைப் பொறுப்பில் அமர்த்துகிற நிலைப்பாடு, நமது கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. இதனைக் கண்டு தினம் துடித்துத் தவிக்கிறேன். இது போன்ற நடவடிக்கைகள் நமது கட்சிக்கும், கட்சி கொள்கைகளுக்கும் எதிராக உள்ளதால், எப்படி உடலை விட்டு உயிர் பிரியுமோ?. அதே வலியுடன், கட்சியை விட்டுப் பிரிகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.