'ஆவின்' முறைகேடு, மோசடி விவகாரத்தில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உண்மை எனும் டைனோசரை விழுங்க முயற்சி செய்திருக்கிறார் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவினைச் சுரண்டி அழிக்கும் முயற்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள 25 ஆவின் ஒன்றியங்களிலும் நடைபெற்று வருகிறது அதனைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது தொடர்பான முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பினோம். அதன் காரணமாக மதுரை மாவட்ட ஆவின் பால் மொத்த குளிர்விப்பான்கள் நிலையங்களிலும் (BMC), குளிரூட்டும் நிலையங்களிலும் (MCC) தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆவின் அதிகாரிகள், ஊழியர்கள் என இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு எங்களது சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரம் இந்த ஆய்வுகள் மதுரை மாவட்டத்தில் மட்டும் நடைபெற்று வருவதும், இதர மாவட்டங்களில் உள்ள ஆவின் ஒன்றியங்களுக்குச் சென்று ஆய்வுகள் நடத்தாமல் சம்பந்தப்பட்ட ஆய்வுக்குழு அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
ஏனெனில் தற்போது மதுரை மாவட்டத்தில் ஆவின் ஒன்றியத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வுக்குழுவின் தலைவரான திரு. அலெக்ஸ் அவர்கள் ஏற்கனவே சென்னையில் பணியாற்றிய காலத்தில் தனக்குச் சாதகமான தனியார் பால் நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து பிற தனியார் பால் நிறுவனங்களுக்கு எதிராகவும், ஆவினுக்கு பாதகமாகவும் நடந்து கொண்டதாக அவர் மீது எண்ணற்ற புகார்கள் வந்ததின் அடிப்படையில் அப்பொழுது பால்வளத்துறை செயலாளராக இருந்த திரு. ககன்தீப்சிங்பேடி அவர்களும், ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. சுனில்பாலிவால் அவர்களும் அலெக்ஸ் மீது நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவராவார்.
மேலும் தற்போது ஆவின் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட ஏற்கனவே ஆவினுக்குப் பாதகமாக நடந்து கொண்ட அலெக்ஸ் தலைமையில் ஆய்வுகள் நடத்திட குழு அமைத்திருப்பது பாலுக்குப் பூனையைக் காவலுக்கு வைத்ததைப் போன்றிருக்கிறது.
எனவே அலெக்ஸ் தலைமையிலான குழுவைக் கலைத்துவிட்டு ஆவின் தொடர்பில் இல்லாத நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய "அதிரடி பறக்கும் படை" அமைத்து, தமிழகத்தில் உள்ள 25ஒன்றியங்களிலும் சோதனைகள் நடத்திட முடுக்கிவிட வேண்டும்.
அப்போது தான் ஆவினில் நடைபெற்று வரும் புரையோடிப் போன முறைகேடுகள், மோசடிகள் அடையாளம் காணப்பட்டு ஆவினும், ஆவினை நம்பியிருக்கும் பல லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் நலனும் காப்பாற்றப்படும் என்பதை தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் ஆவினில் நடைபெற்று வரும் முறைகேடுகள், மோசடிகள் தொடர்பாக கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அப்படி எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. ஆனால் பால் முகவர் எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் தொடர்ந்து அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதாக பதிலளித்து உண்மையைக் குழி தோண்டி புதைக்க மட்டுமல்ல ஒரு முழு டைனோசரையே விழுங்கி ஏப்பம் விட முயற்சி செய்திருக்கிறார் என்பதும், முறைகேடுகளை, மோசடிகளை மறைத்து வருவதும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது.
அரசியல் பயணத்தில் தன்னை அடையாளப்படுத்தியது சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருந்ததே என்பதை தமிழக முதல்வர் அவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.
எனவே ஆவின் நிறுவன வளர்ச்சி மீதும், பால் உற்பத்தியாளர்கள் நலன் குறித்தும் உண்மையாக கவலைப்படும், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இனியாவது ஈகோ பார்க்காமல் உரிய நடவடிக்கைகளை விருப்பு வெறுப்பின்றி எடுக்க முன்வர வேண்டும் எனவும், மெய்ப்பொருள் காண்பதறிவு எனவும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.