Minister SAKKARAPANI says EPS has shown slavish loyalty by saving the Modi govt

மா சாகுபடி விவசாயிகள் கோரிக்கைக்குத் தீர்வு கண்ட பிறகு ஆர்ப்பாட்டம் அறிவிப்பதா?. மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி( GST) வரியைக் குறைக்க திமுக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவது விந்தையிலும் விந்தை. விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் காப்பாற்றி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார் பழனிசாமி. ஒன்றிய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என இரட்டை வேடம் போடும் கபட வேடதாரிதான் பழனிசாமி என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மா’சாகுபடி விவசாயிகளுக்காக திமுக அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருக்கிறது அதிமுக. மா விவசாயிகள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசு. பழனிசாமி செய்தித் தாள்களைக் கூடப் படிக்காமல் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை விடுகிறார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி. உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் அரசின் மீது வீணான அவதூற்றைப் பரப்பியிருக்கிறார்.

Advertisment

ஒரு பிரச்சினை எழுந்தால் அதனை உடனடியாகக் கவனித்துத் தீர்வு காணும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அப்படிதான் மா சாகுபடி விவசாயிகளின் கோரிக்கை விவகாரத்திலும் தலையிட்டு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. அதன் பிறகும் தன் இருப்பை காட்டிக் கொள்ளப் போராட்டம் அறிவித்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. கிருஷ்ணகிரி , திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1.46 இலட்சம் எக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. வழக்கமாக 5 முதல் 6 மெட்ரிக் டன் அளவிற்கு உற்பத்தியாகும் மா உற்பத்தி இந்த ஆண்டு பருவ நிலையின் சாதகத்தால் 8 மெட்ரிக் டன்னிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

மாம்பழக் கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மா சாகுபடி விவசாயிகள் இடையிலான முரண்பாடுதான் பிரச்சினைக்குக் காரணம். இது தொடர்பாகக் கடந்த 16ஆம் தேதி வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் தலைமையில், தோட்டக்கலைத் துறை இயக்குநர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் நிறுவனங்கள் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், மாம்பழங்களைக் கொள்முதல் செய்யும் தேவை குறைந்துள்ளதாகப் பதப்படுத்தும் நிறுவனங்கள் சார்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Minister SAKKARAPANI says EPS has shown slavish loyalty by saving the Modi govt

Advertisment

தேவை குறைந்துள்ளதாலும் மா உற்பத்தி அதிகமானதாலும் விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது என்றும் சொன்னார்கள். ஜூன் 20ஆம் தேதிக்கு மேல் விவசாயிகளிடமிருந்து மாம்பழங்களைக் கொள்முதல் செய்து கொள்வதாக பதப்படுத்தும் நிறுவனங்கள் அரசு அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளன. மா சாகுபடி விவசாயிகளின் நலன் கருதி மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை விவசாயிகளிடம் இருந்து நியாயமான விலையில் கொள்முதல் செய்யவும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். வேளாண்மை உற்பத்தி ஆணையரும் அரசு செயலாளருமான தட்சிணாமூர்த்தி மாம்பழக் கூழ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட செய்தி நேற்றும் இன்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இத்தனைக்கும் பிறகு போராட்டத்தை அதிமுக நடத்துகிறது என்றால் அதற்கு அரசியல் காரணம் தவிர வேறு என்ன இருக்க முடியும்?.

பிரச்சினைக்கு அரசு தீர்வு காணாவிட்டால் அதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக் காட்டலாம். ஆனால், தீர்வு கண்ட பிறகும் நடவடிக்கை எடுத்துவிட்ட பிறகும் உண்ணா விரதப் போராட்டத்தை அறிவிப்பது எதற்காக? மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படும் எனச் சொல்லப்பட்ட 20-ம் தேதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை பழனிசாமி அறிவித்தது அரசியல் ஆதாயம் பெறத்தானே!. ‘இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என பழனிசாமி அறிக்கையில் பச்சைப் பொய் சொல்வதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ‘மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும்’ என திமுக அரசை பழனிசாமி வலியுறுத்துவது எல்லாம் விந்தையிலும் விந்தை.

Minister SAKKARAPANI says EPS has shown slavish loyalty by saving the Modi govt

அதற்கான அதிகாரத்தை வைத்திருக்கும் ஒன்றிய பாஜகவைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாமல் அறிக்கை வெளியிடுவதன் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் காப்பாற்றி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு என்றால் கொஞ்சல், மாநில அரசு என்றால் எரிச்சல் என இரட்டை வேடம் போடும் கபட வேடதாரிதான் பழனிசாமி. மா விவசாயிகளின் நலனை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனைக் காப்பாற்றி வருவது திராவிட மாடல் அரசுதான். வேளாண் துறைக்குத் தனிப் நிதிநிலையை அறிவித்து உழவர் குடி மக்களின் வாழ்வை உயர்த்தப் பாடுபட்டு வரும் திராவிட மாடல் அரசை இந்த அபத்தப் பொய்களால் எல்லாம் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.