ஆந்திராவிலுள்ள பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தும் வகையில் சாதிக்கொருவர் என 5 பேரை துணை முதல்வர் பதவியில் அமர்த்தியிருக்கிறார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அதே பாணி அரசியலை தமிழகத்தில் நிலை நிறுத்த போர்க்கொடி உயர்த்தியுள்ளது நாடார் மஹாஜன சபை. இது குறித்து எடப்பாடிக்கு கடிதம் அனுப்பியிருக்கும் இச்சபையின் தமிழக தலைவர் கார்த்திகேயனிடம் நாம் பேசியபோது, ""அம்பாசங்கர் கமிஷனின் ஆய்வுப்படி, தமிழகத்தில் பெரும்பான்மை சமூகத்தில் முதலிடத்தில் இருப்பது வன்னியர்கள். அதன்பிறகு நாடார்கள். மூன்றாவது இடத்தில் கொங்கு வேளாளர்களும், நான்காவது இடத்தில் முக்குலத்தோரும் இருக்கிறார்கள். ஆனால், இந்த அளவுகோல்படி எடப்பாடி அமைச்சரவையில் எங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை.
முக்குலத்தோருக்கு 9 அமைச்சர்களும், கொங்குவேளாளர் சமூகத்துக்கு 6 அமைச்சர்களும் இருக்கிறார்கள். எண்ணிக்கை அடிப் படையில் 2-ஆம் இடத்திலுள்ள நாடார் சமூகத்துக்கு ஒரே ஒருவர்தான். அதே போல வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் முறையான பிரதிநிதித்துவம் இல்லை. அதனால், தமிழகத்திலும் 5 துணை முதல்வர்களை எடப்பாடி உருவாக்க வேண்டும். அமைச்சரவையையும் மாற்றி, நாடார் சமூகத்துக்கு 1 துணை முதல்வர் பதவியும், 3 அமைச்சர் பதவியும் தருவதுதான் சரியானது. இதனை அவர் அலட்சியப்படுத்தினால் அவருக்கு எதிராகவும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும் நாடார் சமூகத்தின் போராட்டம் வெடிக்கும்'' என்கிறார் ஆவேசமாக.