தமிழக சட்டமன்றத்திற்கான வாக்குப் பதிவு தமிழகம் முழுக்க காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. காலை வாக்குப் பதிவு துவங்கிய சில நேரங்களிலேயே அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேபோல் திரை நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதேவேளையில் சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறுகளும் ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப் பதிவு துவங்கியது.
இந்நிலையில் சென்னை மதுரவாயில் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான பெஞ்சமின் மதுரவாயிலில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு காலை வந்தார். அப்போது, அங்கு இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறில் அமைச்சர் பெஞ்சமின் எதிர் தரப்பினரை தகாத வார்த்தையில் திட்டியும் சாதிய ரீதியான கடுஞ்சொற்களை கொண்டும் திட்டியுள்ளார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.