பேக்கேஜ் முறையில் மக்கள் கூட்டத்தை கூட்டி, டிடிவி தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அமைச்சர் வேலுமணி விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன், ஆட்சி காணாமல் போய்விடும் என்ற பயத்தில் அமைச்சர் வேலுமணி பேசுவதாக பதிலடி கொடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 8 நாட்களாக சட்டமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்தவகையில், நேற்று தஞ்சை மாவட்டத்தில் கடைசி நாள் சுற்றுப்பயணமாக பேராவூரணி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். அ.தி.மு.க வினருக்கே உரிய முறைப்பாரி வரவேற்பு, கிராமத்துப் பெண்களை குட்டி யானையில் அழைத்து வருவதும் இருந்தது.
தினகரன் வருகைக்கு 2 மணி நேரம் முன்பு மேடையில் குத்தாட்டம் போட்டு கூட்டத்தை நிறுத்தி வைத்தனர். திருச்சிற்றம்பலத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருவதாக கூட்டத்தை கூட்டியதால் பட்டுக்கோட்டை - புதுக்கோட்டை - பேராவூரணி சாலை போக்குவரத்து நெரிசலால் முடங்கியது. இதனால் நேற்று சிவராத்திரிக்காக கீரமங்கலம், நெடுங்குடி சிவன் கோயிலுக்கு செல்ல வந்த பக்தர்கள் பரிதவித்தனர். இரவு 8.45 மணிக்கு பிறகு வந்த தினகரன் பேசும் போது..
இன்று அமைச்சர் வேலுமணி சொல்லி இருக்கிறார், தினகரனுக்கு கூட்டம் கூடுவது பேக்கேஸ் கொடுத்து கூட்டி வரும் கூட்டம் என்று. அவர்கள் தான் அம்மாவை ஏமாற்றி ஒவ்வொரு வேலைக்கும் கமிஷன் வாங்கி அதில் கூட்டம் கூட்டி வருகிறார்கள் என்பதை மறந்து விட்டார்.
நாங்கள் பணம் கொடுக்கவில்லை ஆனால் வாகன ஏற்பாடு செய்து கொடுத்திருப்பார்கள். ஆட்சி காணாமல் போய்விடும் என்ற பயத்தில் அமைச்சர் வேலுமணி பேசுகிறார். அதிலும் இந்த வேலுமணி வேலைகளை கட்சிக்காரர்களுக்கு கூட கொடுக்காமல் தனது பினாமி நிறுவனப் பெயரில் வேலை செய்கிறார். இன்னும் 6 மாதத்தில் ஆட்சி முடிவுக்கு வரும் அப்போது அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் வெளியே வரும்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி வேலுமணிக்கு சரியாக கமிஷன் கொடுக்கவில்லை என்பதால் தான் அவரை மாட்டிவிட்டார். இது கூவத்தூர் பழனிச்சாமிக்கும் தெரியும். வேலுமணி, வைத்திலிங்கம் எல்லோரும் விவசாயம் செஞ்சா சம்பாதிச்சாங்க? எங்களிடம் ஆட்சி, சின்னம் இல்லை ஆனால் கூட்டம் நம்ம பக்கம் இருக்கிறது.
ஆர்.கே.நகரில் திமுக இன்னும் கொஞ்சம் வேலை செய்திருந்தால் அ.தி.முக டெபாசிட் கூட வாங்கி இருக்காது. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்க, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதுடன் சட்டமாக கொண்டு வந்து பாதுகாப்போம். ஏரி, குளம் பாதுகாக்கப்பட்டு விவசாயம் பழையபடி பாதுகாக்கப்படும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல மண்ணுக்கு அடியில் வைரமே இருந்தாலும் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார்.
- இரா.பகத்சிங்