Skip to main content

கோஷ்டி அரசியலால் நெல்லையில் நிறுத்தப்பட்ட உட்கட்சித் தேர்தல்!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

இதுவரை 14 உட்கட்சித் தேர்தலை சந்தித்து ஜனநாயகத்தைக் கட்டிக்காத்த திமுக, ஸ்டாலின் தலைமையிலான முதல் தேர்தலாகவும், கட்சியின் 15- வது உட்கட்சித் தேர்தலாகவும் தமிழகமெங்கும் தேர்தலை நடத்தி வருகின்றது. இந்நிலையில், தங்களுக்குள் எழுந்த கோஷ்டி அரசியலால் தேர்தலையே நிறுத்தி வைத்து தலைமையை சிக்கலில் ஆழ்த்தியுள்ளனர் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர்.


ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெறவுள்ள திமுக உட்கட்சித் தேர்தலில், இன்று முதல் தமிழகமெங்கும் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி கிளைகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகின்றது. கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட திருநெல்வேலி திமுகவில் கிழக்கு மாவட்ட செயலாளராக ஆவுடையப்பனும், மேற்கு மாவட்ட செயலாளராக சிவபத்மநாபனும், மத்திய மாவட்ட செயலாளராக அப்துல்வகாப்பும் செயலாற்றி வருகின்றனர். 


இந்நிலையில் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட மானூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட 180 கிளைக் கழகத்திற்கும் அவைத்தலைவர், செயலாளர், மேலவை பிரதிநிதி, பொருளாளர், துணை செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டு விருப்பமனு பெறப்படும் இடம், அதற்கான பொறுப்பாளர்களையும் முன்னதாக அறிவித்துள்ளார் மாவட்ட செயலாளரான அப்துல்வகாப். இவ்வேளையில், மாநிலத்திலேயே இங்கு மட்டுமே கிளைக்கழகத்திற்கான விருப்பமனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 

"40 கிளைக்கழகங்களைக் கொண்ட மானூர் தெற்கு ஒன்றியத்தைப் பொறுத்தவரை விருப்பமனுக்கள் பெறக்கூடிய இடமாக திருமண மண்டம், சமுதாயக்கூடங்கள் என மூன்று இடத்தினை முன்பே அறிவித்தனர். ஆனால் இன்று அறிவிப்பிற்கு மாறாக சுத்தமல்லி விலக்கில் உள்ள ஒன்றிய செயலாளரின் அலுவலகம், வெள்ளாளங்குளத்திலுள்ள ஒரு வீடு மற்றும் நடுக்கல்லூரில் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் மனுக்களை பெற ஆரம்பித்தனர். விருப்ப மனுக்கட்டணமாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.20 என்பதனை தவிர, ஏனைய பதவிகள் அனைத்திற்கும் விருப்ப மனுக்கட்டணம் ரூ.100. விருப்ப மனுவினை வாங்கிய பொறுப்பாளர்கள் மனுக்கட்டணத்திற்கு ரசீதை கொடுக்கவில்லை. 


மத்திய மாவட்டத்திற்குட்பட்ட 180 கிளைகள் கொண்ட இரண்டு ஒன்றியங்களிலும் இதே நிலைமை தான். தங்களுக்கு சாதகமான இடத்தினை தான் மாற்றினார்கள் என்றால் போட்டியிட்டோம் என்பதற்கு ஆதாரமாக இருக்க வேண்டிய ரசீதையும் தர மறுக்கின்றனர் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தரப்பு ஆட்கள். இதில் எங்கிருக்கின்றது உட்கட்சி ஜனநாயகம்..? முன்னாள் எம்எல்ஏ. மாலைராஜாவிற்கும், மாவட்ட செயலாளர் அப்துல்வகாப்பிற்கும் நடக்கும் கோஷ்டி அரசியலால் உண்மையான தொண்டர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தேர்தல் நின்று போனது தான் மிச்சம்." என்கிறார் நெல்லை மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர்.

 

இதே வேளையில், "ரசீது இருந்தால் மட்டுமே நாளை பொறுப்பாளர்களுக்கான போட்டியில் தேர்வு செய்யப்படுவார்கள். இல்லையென்றால் விருப்பமனு நிராகரிக்கப்பட வாய்ப்புண்டு" என்பதால் விருப்பமனு செலுத்திய சிலர் ஒரு குயர் நோட்டைக் கொண்டு வந்து பணம் செலுத்தியதற்கு பொறுப்பாளர்களிடம் கையெழுத்து வாங்கி சென்றது தனிக்கதை. எனினும், திமுக தலைவராக ஸ்டாலின் வருகைக்கு பின் நடைபெறும் உட்கட்சி தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் விவகாரம் தலைமை வரை சென்று மாவட்ட நிர்வாகிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்