நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. மேலும் அடுத்தடுத்து என இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 25 ஆம் தேதியும், இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் வீடியோவை வெளியிட்டு, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” எனக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் விடியோவை நேற்று (21.05.2024) பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவானது கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி அங்குள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று மக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது கல்லூரி மாணவிகளின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். ராகுல் காந்தியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்த வீடியோவை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ‘அண்ணனுக்கு நன்றி’ எனப் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் யாரையும் அதிமுகவினர் புகழ்ந்து பேசும் வழக்கம் கிடையாது. அப்படி இருக்க வழக்கத்திற்கு மாறாக செல்லூர் ராஜு செயல்பட்டிருப்பது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. அதிமுகவின் தலைமையின் மீது ஏதேனும் அதிருப்தி உருவாகியுள்ளதா அந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக செல்லூர் ராஜு இப்படி பதிவிட்டுள்ளாரா? என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சகர்கள் பல்வேறு கருத்துகளை வைத்திருந்தனர். அதோடு திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் பிரபல தலைவரை செல்லூர் ராஜு புகழ்ந்து பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை அதிமுக நிர்வாகிகளின் ஒரு தரப்பு அக்கட்சியின் தலைமைக்குப் புகார் கொடுத்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட வீடியோ பதிவை செல்லூர் ராஜு நீக்கியுள்ளார்.