கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கையில் கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் முதல்வருடனான காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாகவும், எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலும் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கார்நாடகவில் இருந்து காவிரி நீரை பெற தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு தொடர்ந்து தேவைக்கேற்ப நீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு விவசாயிகளின் பாசனத்திற்கேற்ப நீர் அளிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி முறியடிக்கப்படும்.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. மேகதாது அணை விவகாரத்தில் தக்க நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்பது உறுதி. தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க விவசாயத்துக்கு தடையின்றி நீர் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். கர்நாடக அரசு சார்பில் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக உத்தேசித்துள்ள திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது வலுவான வாதங்களை முன்வைத்து கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும். மேகதாது அணை கட்ட ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என பிரதமரை 3 முறை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.