தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கியுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம், வேட்பாளர் நேர்காணல் என அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் பிஸியாகவே உள்ளன. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வரும் அ.தி.மு.க. தலைமை, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டனர்.
இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய பரப்புரையை, சென்னையில் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தினந்தோறும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை மக்கள் நீதி மய்யம், நாளை (07/03/2021) வெளியிடுகிறது. இதில், நடிகர் கமல்ஹாசன், கவிஞர் சினேகன், டாக்டர் மகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளின் பெயர்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளும் நாளை (07/03/2021) அறிவிக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில், கமல்ஹாசனுடன் ஆலோசனை நடத்திய பிறகு கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ரவி பச்சமுத்து, சரத்குமார் ஆகியோர், "மக்கள் நீதி மய்யம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி இடையே நாளைக்குள் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தமாகும்" என்றனர்.