Skip to main content

விஜயபாஸ்கர் வீட்டின் முன் வேலுமணி மற்றும் தங்கமணி! (படங்கள்) 

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 2021ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாக 58 கோடி ரூபாயைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி, மகள் பேரிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. 

 

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை, ரெம்ஸ் தெருவில், அமைந்துள்ள விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு அதிமுக கட்சியினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ஆகியோர் கூடியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு விஜயபாஸ்கரின் அதிரடி ஆஃபர்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Innova car if you buy more votes Vijayabaskar offer to ADMK executives

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ம.தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரை வைகோ களமிறங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போராடி வேட்பாளராக கருப்பையாவிற்கு சீட் வாங்கி விட்டார். மற்றொரு பக்கம் பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. களமிறங்கி உள்ளது.

இதையெல்லாம் கடந்து புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல மாவட்டங்களில் ஏராளமான கிராமங்களை பொதுவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் விதமாக கிராமங்கள் தோறும் கிராமாலாயா தொண்டு நிறுவனம் மூலம் தனி நபர் கழிவறைகள், பள்ளிகளுக்கான கழிவறைகள் கட்டிக் கொடுத்து முழு சுகாதார கிராமங்களை கண்டதால் கடந்த 2022 ல் பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலாயா தொண்டு நிறுவன நிறுவனர் தாமோதரன் வேறு சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். திருச்சி தொகுதிக்கான போட்டி கடுமையாக இருக்கும் பட்சத்தில் நான் வாங்கிக் கொடுத்த சீட்டில் கருப்பையாவை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று சில தேர்தல் வியூக ஏஜென்சிகளின் உதவியுடன் தேர்தல் பணிகளை விஜயபாஸ்கர் முடுக்கிவிட்டுள்ளார். மேலும் வழக்கம் போல தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி அவர்களை பார்த்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், செவ்வாய் கிழமை திருச்சி தொகுதிக்கான புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிமனைக்கு அ.தி.மு.க. நகர நிர்வாகிகள், வட்டச் செயலாளர்களை அழைத்து வழக்கம் போல உற்சாக பேச்சுகளை அவிழ்த்து விட்டார் தொடர்ந்து எந்த தொகுதியில் தி.மு.க.வை விட அதிக ஓட்டு வாங்கி கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு வேட்பாளர் சார்பில் இன்னோவா கார் பரிசு வழங்கப்படும். அதற்குள் தேர்தல் கட்டுப்பாடுகள் முடிந்துவிடும். அதே போல  அ.தி.மு.க வட்டச் செயலாளர் தி.மு.க.வுக்கு ஒரு ஓட்டு கூட வாங்காமல், அ.தி.மு.க.வுக்கு வாங்கி கொடுத்தால் 5 பவுன் தங்கச் சங்கிலி நான் போடுகிறேன். ஏற்கெனவே தங்க மோதிரம் வாங்கி இருக்கிறார்கள். அதே போல இந்த தேர்தலிலும் அதிக ஓட்டு வாங்கினால், தங்க சங்கிலி பரிசு. இடையில் ஒருவர் குறுக்கிட்டு அப்ப தெற்கு மாவட்டத்திற்கு என்று கேள்வி எழுப்ப, தெற்கு - வடக்கு இரு பக்கமும் தலா 5 பவுன் போடுகிறேன். வேட்பாளரிடமும் சொல்லிடுறேன். இப்பவே களப்பணியை தீவிரமா செய்ங்க என்று உற்சாகப்படுத்தி அனுப்பினார்.