Skip to main content

மாரத்தான் நாயகர் மா.சு.வின் சர்வதேச விர்ச்சுவல் மாரத்தான் ஓட்டம்! 

Published on 17/08/2020 | Edited on 17/08/2020

 

M. Subramaniam

                     

தமிழகத்தின் 'மாரத்தான் நாயகர்' என வர்ணிக்கப்படும் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், புதுமையான மாரத்தான் நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்.  

                
தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை உலகம் முழுவதும் நினைவு கூர்ந்திடும் வகையில், ‘கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் (விர்ச்சுவல்) மாரத்தான்’ ஓட்டத்தை இணைய வழி மூலம் நடத்தி வருகிறார் மா.சுப்ரமணியன். 


இந்த மாரத்தான் ஓட்டத்தின் இணைய வழி தொடக்கத்தைக் கடந்த 6-ஆம் தேதி அறிவாலய வளாகத்தில் துவக்கி வைத்தார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். கரோனா பேரிடரான இந்த நெருக்கடியான காலத்தில், ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்பதை ஆரம்பத்தில் இருந்தே அறிவுறுத்தி வருகிறது உலக சுகாதார நிறுவனம். 

                  

அந்த வகையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மக்களிடம் உருவாக்கவும், அதன் தேவையினை எடுத்துச் சொல்லவும் சர்வதேச மாரத்தான் ஓட்டத்தை ஒருங்கிணைத்தார் மா.சுப்ரமணியன். புதுமையான முறையில் துவக்கப்பட்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரசு நாடுகள், பின்லாந்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட உலக நாடுகளிலிருந்து எண்ணற்ற மக்கள் இதில் கலந்து கொண்டு ஓடினார்கள். 

             

M. Subramaniam

 

இது குறித்து மா.சுப்ரமணியனிடம் நாம் பேசிய போது, "உலகத்தின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இணையத்தளம் வாயிலாக தங்களைப் பதிவு செய்து கொண்டு இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொள்ளலாம். ஆகஸ்ட்-7 முதல் 25 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 31 வரை இந்த ஓட்டம் நடந்து கொண்டிருக்கும். 

                        

வீட்டு மாடியில், தோட்டத்தில், ட்ரட்மில்லில், எனத் தங்களின் வாழ்விடங்களுக்கேற்பவும் வாய்ப்புகளுக்கேற்பவும் இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடலாம். இந்த விர்ச்சுவல் மாரத்தானில் கலந்து கொண்டு ஓடுபவர்களுக்கு அதற்கான சான்றிதழும் இணையம் வழியாகவும், அதற்குரிய பதக்கம் அஞ்சல் மூலமாகவும் அவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

                      

http://onelink.to/nknapp

 

அவரவர் நாடுகளில் உள்ள ஊரடங்கு சட்ட விதிகள், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள், தனி மனித இடைவெளி ஆகியவைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கலந்து கொள்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்கு வயது தடையில்லை. மேலும், இதில் கலந்துகொள்ள 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மாரத்தான் ஓட்டம் நிறைவு பெற்றதும், கட்டணம் பெறப்பட்ட மொத்த தொகையும் கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்க்ய் பயன்படுத்தப்பட்டு, அந்த உபகரணங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்!"  என்கிறார் பெருமிதமாக மா.சுப்ரமணியன்.

                   

மாரத்தான் நாயகரின் இந்தப் புதிய முயற்சி கின்னஸில் இடம் பெறும் என்கிறார்கள் தி.மு.க.வினர்.

 

 

சார்ந்த செய்திகள்