‘திமுகவை சீண்டாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்..’ என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பார் போலும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி!
தனது ட்விட்டர் பக்கத்தில் ‘யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது? வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அதிமுக, அதற்கு உரிமை கோருவது திமுக. சொந்த புத்தியும் இல்லை, உழைப்பும் இல்லை. அன்றுமுதல் இன்றுவரை, ஒட்டுண்ணி அரசியல் செய்வது திமுக’ என்று பதிவிட்டுள்ளார்.
‘உச்ச நீதிமன்றத்தில் முன்னோடியாக சென்று வழக்கு தொடர்ந்தது திமுக-தானே? அதனையொட்டித்தானே அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளோடு, தமிழக அரசும் சமூக நீதி கேட்டு வழக்கு தொடர்ந்தன அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ட்விட்டர் பதிவு எந்தவிதத்தில் சரியாகும்?’ என்று அதிமுகவினரிடம் கேட்டோம்.
“தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் சமூக மறுமலர்ச்சியைக் கருத்தில்கொண்டு, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த வகையிலும் ஊறு நேரா வண்ணம், எப்பொழுதும்போல், இனி வருங்காலம் முழுவதிலும், அரசு பணிகளிலும், கல்வி நிலையங்களின் அனுமதியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து அமலில் இருக்கத்தக்க வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் விரைவில் உரிய திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென்று, மத்திய அரசை வலியுறுத்தும் விதத்தில், தமிழக சட்டமன்ற பேரவையின் சிறப்பு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.
இடஒதுக்கீடு பிரச்சனையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த இந்த உறுதியான நடவடிக்கைக்காகத்தான், ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, இட ஒதுக்கீடு பிரச்சனையில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்நிலையில், ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு பிரச்சனையில் அதிமுகவும் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்ற நிலையில், அந்த வெற்றியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, திமுக அரசியல் செய்து விளம்பரம் தேடுகிறது. அதனால்தான், ட்விட்டரில் கே.டி.ராஜேந்திரபாலாஜி, திமுகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்” என்கிறார்கள்.
சமூக நீதிக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடப்பட வேண்டிய இடஒதுக்கீடு தீர்ப்பினை, அரசியலாக்குவது கொடுமையே!