
இன்று தமிழக ஆளுநரை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் சென்னை தேனாம்பேட்டையில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், '' குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அவர் நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டுமே அல்லாமல் இதுபோன்ற புளுகு மூட்டைகளின் பின்னால் ஒளிந்திருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. கோவை கேஸ் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக உடனடியாக போலீசார் விசாரணை மேற்கொண்டு 12 மணி நேரத்திலேயே குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேரையும் உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் இது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சில நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது போன்ற மாயத் தோற்றத்தை, மாயாஜால பிம்பத்தை உருவாக்கி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். சட்ட ஒழுங்கு பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. ஒரு 10 பேரை தூத்துக்குடியில் குருவி போல் குறி பார்த்துச் சுடும் அளவிற்கு சட்ட ஒழுங்கு யார் ஆட்சியில் சீர்குலைந்திருந்தது? சாத்தான்குளத்தில் காவல்நிலையத்தில் இருவரை அடித்துக் கொன்றார்களே அது யாருடைய ஆட்சியில் நிகழ்ந்தது? பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்களே பெண்கள், அது யார் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது என்பதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி வசதியாக மறந்துவிட்டு இன்று இருக்கக்கூடிய அரசின் சட்ட ஒழுங்கு குறித்துக் குறைகூறுவது எள்ளி நகையாடத்தக்கது. தான் தான் அதிமுக என தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார்'' என்றார்.