Skip to main content

ராகுல்காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி 

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

இந்தியாவின் எதிர்கால பிரதமராக முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி போட்டியிட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளுக்கு மதச்சார்பற்ற கூட்டணி பேராதரவு வழங்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.


 

stalin-rahul


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் தேர்தலை சந்திக்கிற நிலை உருவாகியுள்ளது. வெளிநாட்டிலிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் தொகையை செலுத்துவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்பு, விவசாயிகளின் விளை பொருளுக்கு உற்பத்தி செலவில் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து குறைந்தபட்ச விலை வழங்குவேன், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் போன்ற வாக்குறுதிகளை நரேந்திர மோடி வழங்கினார். ஆனால் இதை எதையுமே நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை பாதிக்கிற பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு போன்ற நடவடிக்கைகளை எடுத்து மக்கள் விரோத அரசாக பா.ஜ.க. அரசு திகழ்ந்து வருகிறது. மேலும் தமிழக மக்களின் நலன் மற்றும் உரிமைகளுக்கு எதிராக பல்வேறு திட்;டங்களை செயல்படுத்தி மக்களின் கடும் கோபத்திற்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்கிற, தடுத்து நிறுத்துகிற எந்த முயற்சியும் செய்யாத துணிவற்ற பினாமி அரசாக எடப்பாடி அரசு இருந்து வருகிறது. மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவதற்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.
 

தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சந்தர்ப்பவாதிகள் ஒன்று சேர்ந்து வருகிற தேர்தலுக்காக தற்காலிகமாக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்கப் போவதில்லை. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுகிற அமோக ஆதரவு பெற்றிருக்கிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னோடி மாநிலமாக தமிழகம் அணி திரண்டு நிற்கிறது.

 

ks azhagiri


 

பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட வேண்டுமென்று தி.மு. கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பே முதன் முதலாக முன்மொழிந்து தேசிய அரசியலுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார். இந்தப் பின்னணியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஒருமித்த உணர்வுடன் எழுச்சியோடு தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவின் எதிர்கால பிரதமராக முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் போட்டியிட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளுக்கு மதச்சார்பற்ற கூட்டணி பேராதரவு வழங்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
 

இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் மதம், ஜாதி, எல்லைகளைக் கடந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய மகத்தான தலைவராக விளங்குகிற திரு. ராகுல்காந்தி அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டும் சொந்தமுள்ளவராக கருத முடியாது. அவர் இந்திய மக்களின் சொத்தாக கருதப்படுகிறவர். அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற, நல்லிணக்க கொள்கைகளுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் வடக்கே உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடுகிற அதேநேரத்தில் இந்தியாவின் தென் பகுதியாக விளங்குகிற தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று லட்சோபலட்சம் மக்களின் சார்பாகவும், மதச்சார்பற்ற சக்திகளின் சார்பாகவும் அவரை அன்போடு வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் வேண்டுகோளை நிச்சயம் ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்புகிறேன். இத்தகைய போட்டியின் மூலம் வடக்கையும், தெற்கையும் இணைத்து நிற்கிற எழுச்சித் தலைவராக  ராகுல்காந்தி அவர்களை கருதி இந்திய மக்கள் அமோக ஆதரவு வழங்குவார்கள் என்பது உறுதியாகும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்