Skip to main content

உள்ளாட்சிக் களம் அழைக்கிறது; நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது! ஸ்டாலின் கடிதம்

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

 


உள்ளாட்சிக் களம் அழைக்கிறது; நல்லாட்சி அமைக்கும் நம்பிக்கை தழைக்கிறது! என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
 

அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
 

எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான தி.மு.க. மீது போட்டுவிடலாமா என 2016-ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து விதிமீறல்களில் வெட்கமின்றி ஈடுபட்டு, முறையான இடஒதுக்கீட்டினையும் தொகுதி வரையறையையும் செய்யாமல் புறக்கணித்து, தில்லுமுல்லுகள் செய்து, தேர்தலை நடத்திடும் தெளிவோ துணிவோ இல்லாமல், உயர்நீதிமன்றத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் வரிசையாகக் குட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது அ.தி.மு.க. அரசு.
 

அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பிறகு, மக்களின் செல்வாக்கு இல்லாமலேயே, தரை தவழ்ந்து, கால் தடவி, ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மக்களை நேரடியாக சந்திக்கும் திராணி இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். அதற்கு ஏதாவது இட்டுக்கட்டிக் காரணம் கற்பிக்க வேண்டுமே என்பதற்காக, தி.மு.கழகத்தின் மீது பழியைச் சுமத்தினர்.
 

ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில், தி.மு.கழகம் என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை, தயங்கியதுமில்லை. வெற்றி - தோல்வியைக் கடந்து, தேர்தலை நாடி எதிர்கொள்கின்ற உண்மையான ஜனநாயக இயக்கம் நம் கழகம். அதுவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை உரிய காலத்தில் திறம்பட நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை தி.மு.க. ஆட்சி போல பலப்படுத்திய அரசு தமிழகத்தில் வேறு கிடையாது.

 

dmk



இந்தியாவின் உயிர் அதன் கிராமப்புறங்களில் தான் உள்ளது என்றார் அண்ணல் காந்தி அடிகள். கிராமப்புற மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள், நெசவாளர்கள், உழைக்கும் தொழிலாளர்கள். அதனால் தி.மு.கழக ஆட்சி அமையும் காலங்களில், கிராமப்புறங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், ஊராட்சிகளின் பொறுப்புகளை அதிகப்படுத்துவதற்கும், தேவையான நிதி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கும் உயரிய முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது.
 

ஊராட்சிகளின் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தியதும்; ஒவ்வொரு ஊராட்சியிலும் முதல் முறையாக பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதும்;
 

மாநில அரசின் சொந்த வரி வருவாயிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியை முதலில் 8 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாகவும், அடுத்து 9.5 சதவிகிதமாகவும், இறுதியாக 10 சதவிகிதமாகவும் உயர்த்தி வழங்கியதும்; அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், குடிசைகள் இல்லாத ஊராட்சிகளை உருவாக்கிட கலைஞர் வீடு வழங்கும் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் போன்ற இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை வகுத்துச் செயல் படுத்தியதும்;
 

மக்களாட்சியின் வேர்களான ஊராட்சி அமைப்புகள், இடையில் 10 ஆண்டுக்காலம் செயல்பட முடியாமல் கட்டுண்டு கிடந்த நிலையை மாற்றி, 1996-ஆம் ஆண்டு தேர்தலை அறிவித்து வெற்றிகரமாக நடத்தியதும்; 2006-ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஊரகப் பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 76 சதவிகித மக்கள் வாக்களித்திட வகை செய்ததும்;
 

மக்களாட்சியில் அரசு நிர்வாகத்தை ஆலமரத்துக்கு ஒப்பிட்டால், அதன் வேர்களாகவும் விழுதுகளாகவும் உள்ளாட்சி அமைப்புகள் விளங்குகின்றன என்பதை உணர்ந்து, ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட முனைந்ததும்; தலைவர் கலைஞர் தலைமையில் அமைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிதான் என்ற பேருண்மையை நாடு அறியும். 2006-2011-ல் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து மாநகராட்சிகள் முதல் ஊராட்சிகள் வரை பல்வேறு திட்டங்களை முன்னின்று நிறைவேற்றிய முத்தான வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன்.
 

ஜனநாயகத்தின் உயிரோட்டம் அதன் ஆணிவேர்களான ஊராட்சி மன்றங்கள்வரை நடைபெற வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இயக்கம் தி.மு.கழகம் என்பதால்தான்; உள்ளாட்சித் தேர்தலை சட்ட நெறிமுறைகளின்படி நடத்துவதிலும், அதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நல்குவதிலும், ஆர்வமும் அக்கறையும் காட்டி வருகிறது என்பதை தமிழக மக்கள் நன்கறிவர்.


 

ஆட்சியில் இல்லாத காலக்கட்டத்திலும், ஊராட்சி மன்றங்களே இல்லாத நேரத்திலும், அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி, திரண்டு வந்த பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளைக் கண்ட இயக்கம், தி.மு.கழகம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் அது 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும், செல்வி. ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும், தற்போதைய அடிமை அரசாக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் சுணக்கமும், ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடுகளுமே வெளிப்பட்டு வருகின்றன.
 

மாநிலத் தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிள்ளையாக வைத்துக்கொண்டு, அடிமை அ.தி.மு.க. அரசு நடத்துகிற ஜனநாயகப் படுகொலைகளை நீதிமன்றங்களே பல முறை தட்டிக் கேட்டிருக்கின்றன. அதனால்தான், 8-12-2019 அன்று நடைபெற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதனைத் தோலுரித்துக் காட்டும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.கழகம் நீதிமன்றத்தை நாடியது ஏன் என்பதற்கான தெளிவான விளக்கம் அந்தத் தீர்மானத்தில் இடம் பெற்றிருக்கிறது.
 

“தமிழ்நாட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முழுமையாக அ.தி.மு.க. அரசிடம் 'சரணாகதி' செய்து விட்டு - முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் விருப்பத்திற்காக - உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டு அடுத்தடுத்து குழப்பங்களை அணிவகுக்க வைத்து - மூன்று வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - ‘பஞ்சாயத்து ராஜ்’ எனும் அடிப்படை ஜனநாயகக் கருத்தாக்கத்தைப் படுகொலை செய்திருக்கிறது” எனக் கண்டனத்தைப் பதிவு செய்த அந்தத் தீர்மானத்தில், கழகம் மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கான காரணங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.
 

அரசியல் சட்டப் பிரிவு 9-ன்படி, 17.10.2016 மற்றும் 19.10.2016 அன்று நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு மாநிலத் தேர்தல் ஆணையமும், அ.தி.மு.க. அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
 

26.9.2016 அன்று அவசரமாகத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அன்றே அ.தி.மு.க. தனது வேட்பாளர்களை அறிவித்தது. வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு கொள்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் செய்யப்பட்ட முறையற்ற தேர்தல் அறிவிப்பைச் சுட்டிக்காட்டி; சட்டப்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே; சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குத் தொடுத்தது.
 

கழகம் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், “தேர்தல் அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு மட்டும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது”; “மற்ற அரசியல் கட்சிகளுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை”; “இடஒதுக்கீடு செய்வதைத் தமிழக அரசு தாமதம் செய்துள்ளது”; “அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் களத்தில் சம வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்யவில்லை”; என்று பல்வேறு கண்டனக் கணைகளைத் தொடுத்து, அறிவுரைகளை வழங்கி, தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து - தெரிவித்த குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து 31.12.2016-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றி, தமிழகத் தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்த முன்வரவில்லை.


 

“2011 மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை முடிந்து விட்டது. 31.5.2019-க்குள் தேர்தலை நடத்துவோம்” என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் முன்பு 1.3.2019-ல் உறுதியளித்தது. அதனையும் காற்றில் பறக்கவிட்டு, “மறுவரையறை தாமதம் ஆகிறது. 2019 செப்டம்பர் இறுதியில்தான் முடியும்” என்றும், “இந்தியத் தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியல் பெறுவதில் தாமதம் ஆகிறது”, “மக்களவைத் தேர்தலால் தேர்தலை நடத்த அதிகாரிகள் இல்லை” என்றெல்லாம் இட்டுக்கட்டி, புதுப்புது காரணங்களையும் சமாதானங்களையும் தேடிக் கண்டுபிடித்து தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் முன்பு 2.7.2019 அன்று, பிரச்சினையையே திசைதிருப்பும் வகையில் சொன்னதுடன், “அக்டோபர் 2019-க்குள் தேர்தலை நடத்துவோம்” என்று மாநிலத் தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டது. ஆனாலும் தேர்தல் நடத்தப்படவில்லை.
 

இறுதியாக 18.11.2019 அன்று “டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அனைத்து சட்டவிதிகளையும் கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என நம்புகிறோம்” என்று உச்சநீதிமன்றம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு இறுதி வாய்ப்பை வழங்கியது. அப்படித்தான் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை மட்டும் வெளியிட்டது.
 

தமிழகத்தில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்பட்டிருந்தாலும்; “நேரடித் தேர்தலுக்குப் பதில் மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம்”, “9 மாவட்டங்களை புதியதாக உருவாக்கி அங்கு இடஒதுக்கீடு, மறுவரையறை செய்யாதது”, “ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல்”, என்றெல்லாம் அ.தி.மு.க. அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தின. இந்தக் குழப்பங்கள் நீக்கப்பட்டு, ஜனநாயக நெறிமுறைகளின்படியும், அரசியல் சட்டம் உருவாக்கியுள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படியும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், உச்சநீதிமன்றத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அணுகியது.
 

அந்த வழக்கில், புதிய மாவட்டங்களைப் பிரித்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமி எடுத்த முயற்சிக்குத் தடை விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். வழக்கு விசாரணையின் போது, “இப்போது ஏன் மாவட்டங்களைப் பிரித்தீர்கள்?”, “மூன்று மாவட்டங்களுக்கு எப்படி ஒரு மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் இருக்க முடியும்? ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்தானே இருக்க வேண்டும்?”, “சட்டபூர்வப் பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு”, “தேர்தல் வேண்டாம் என்று மனுதாரர் (தி.மு.க.) சொல்லவில்லை. உள்ளாட்சித் தேர்தலை சட்டப்படி நடத்த வேண்டும் என்றுதான் மனுதாரர் (தி.மு.க.) சொல்கிறார்”, என்றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய ஆழமான கேள்விகளே, அ.தி.மு.க. அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் உள்நோக்கத்துடன் செயல்படுவதை, தமிழக மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம், அம்பலப்படுத்தின.


 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், குளறுபடிகளைச் சரிசெய்யாமல், அதே தேர்தல் தேதியை மீண்டும் அறிவித்த நிலையில்தான், தி.மு.கழகம் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. அந்த வழக்கில், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுக்கின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஏதோ தி.மு.க.,வுக்கு விழுந்த சம்மட்டி அடி என்பது போல நினைத்துக் கொண்டு ஓர் அமைச்சர் தள்ளாட்டத்தில் துள்ளாட்டம் போடுகிறார். கடந்த மூன்றாண்டுகாலமாக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மரண அடி வாங்கி, மாநிலத்தின் மானத்தை வாங்கியிருப்பது அ.தி.மு.க ஆட்சிதானேதவிர, தி.மு.கழகத்தின் ஜனநாயகம் காக்கும் பணியை உச்சநீதிமன்றம் பாராட்டவே செய்திருக்கிறது.
 

அ.தி.மு.க. அரசு எத்தனை அத்துமீறல்கள் செய்திட நினைத்தாலும், மாநில தேர்தல் ஆணையத்துடன் சூழ்ச்சிகரமான கூட்டணி அமைத்துக்கொண்டு முறைகேடுகளுக்கு வழி வகுத்தாலும், மக்களின் பேராதரவு தி.மு.கழகத்திற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமே இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஊராட்சிகள் எத்தகைய அவலட்சணத்தில் இருக்கின்றன என்பது ஊரறிந்த - நாடறிந்த - ஏடறிந்த ரகசியம்தான். தி.மு.கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சிகளில் மக்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றபோது, ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொட்டித் தீர்த்த கோபமும், தி.மு.க. மீது அவர்களுக்கு இருக்கிற கெட்டியான பற்றுதலும் மறக்க முடியாதது. தேர்தல் களத்திலும் அதுவே நிச்சயம் வெளிப்படும்.
 

அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்திடத் துடிக்கும் அதிகார அடிமையான அ.தி.மு.க. அரசுக்கு, தக்க பாடம் புகட்டிட தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தினாலும், அத்தனை கட்டத்திலும், அ.தி.மு.க. அடையப்போவது தோல்விதான்; தோல்வி தவிர வேறல்ல. மக்கள் எழுதி வைத்திருக்கும் மகத்தான இந்தத் தீர்ப்பினை, கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் தெளிவாக உணர்ந்துகொண்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தை சந்தித்திட ஆக்கபூர்வமான வியூகம் வகுத்திட வேண்டும்.


 

கடந்த மூன்று நாட்களாக நான் மாவட்ட கழகச் செயலாளர்களிடம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடர்ந்து கலந்து பேசி வருகிறேன். இன்று காலை வரை, 11 மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் நமது கூட்டணிக் கட்சிகளுடன் பேசி உடன்பாடு ஏற்பட்டு, அதன் விளைவாக பட்டியலை தங்கள் மாவட்டக் கழகத்தின் மூலம் வெளியிட்டுவிட்டோம் என்ற சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன். மற்ற மாவட்டங்களும் தோழமைக் கட்சியினருடன் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையினை தொடர்ந்து மேற்கொண்டு, சுமுகமான உடன்பாடு கண்டிட வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன். கழகத்தின் சார்பில் போட்டியிடக்கூடிய இடங்களில், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையும் - மேலான வெற்றிவாய்ப்பும் உள்ள, அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்திருக்கும் வேட்பாளர்களை களமிறக்கிட வேண்டும். கழகத்தின் அடி முனையில் ஆர்வமுடன் காத்திருக்கும் தொண்டர்களையும் அரவணைத்து, தோழமைக் கட்சியினரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு வாக்காளரின் உறுதியான நம்பிக்கையையும் பெற்றிடும் வகையில் கண்ணும் கருத்துமாக உழைத்திட்டால்தான், வெற்றி நம் கைகளுக்கு வரும்.
 

நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் இனிப்பான வெற்றிப் பரிசும், இடைத்தேர்தல் களம் தந்துள்ள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை; மறக்கக் கூடாதவை. கடந்தகால வெற்றியாயினும் தோல்வியாயினும் அது தரும் படிப்பினைகளை நுணுக்கமாகக் கற்றறிந்து கொள்ள வேண்டும். அலட்சியம் துளியுமின்றி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் முழுமையாகப் பெறுவதன் மூலம்தான், நம் வெற்றியின் இலக்கை அடைந்திட முடியும்.
 

சூதுமதியாளர்களாம் அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும்போது, விரைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். என்றும் நாம் மக்கள் பக்கம் நிற்போம்; எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம்! வீணர்தம் கொட்டம் அடக்குவோம்; விவேகமும் வேகமும் நிறைந்த பணியை விரைந்தாற்றுவோம்! இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்