அரசியல் ரீதியாக முதல்வரைச் சந்திக்க இன்னும் காலம் இருக்கிறது என பா.ஜ.க. தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைத்து பூஜை செய்வதற்கும், சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்துவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவை பா.ஜ.க. மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்தச் சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்த பா.ஜ.க. தலைவர் முருகன், விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாகக் கோரிக்கை வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அரசு விதிமுறைகளைப் பின்பற்றி சிலைகள் வைத்து வழிபடுவோம் என முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். சிலை வைத்து வழிபடுவதற்காக வழிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்துக் கூறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்" எனக் கூறினார். மேலும், இது அரசியல் ரீதியிலான சந்திப்பா..? எனக் கேள்வி எழுப்பப்பட்டதற்குப் பதிலளித்த அவர், "அதற்கு இன்னும் காலம் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.