Skip to main content

''நேற்றிலிருந்து ஃபோனை கீழே வைக்கவே முடியவில்லை;நான் சாதாரண ஸ்டாலின் அல்ல''-முதல்வர் பேச்சு

Published on 11/12/2022 | Edited on 11/12/2022

 

 "I have not been able to put down the phone since yesterday; I am not an ordinary Stalin" - Chief Minister's speech

 

'நம்பர் ஒன் முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு எந்த பெருமையும், பாராட்டும் இல்லை. என்று நம்பர் ஒன் தமிழ்நாடு என்று வருகிறதோ அன்றைக்குத்தான் பெருமைப்படுவேன். அதையே நிறைவேற்றுவான் இந்த ஸ்டாலின்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

 

இன்று தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அய்யாராசு குடும்ப திருமண நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் பேசுகையில், ''இரண்டு நாட்களாக பார்க்கிறவர்கள் எல்லாம் இதைத்தான் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்த பொழுது என்ன நிலை, ஒரு பெரிய கொடிய தொற்றுநோய் கரோனா. அதிலிருந்து மீண்டோம். நான் பல நேரங்களில் சொல்லுவதுண்டு, அன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த மா.சுப்பிரமணியன் மட்டும் ஹெல்த் மினிஸ்டர் அல்ல, முதலமைச்சரிலிருந்து எல்லா அமைச்சர்களும் ஹெல்த் மினிஸ்டர்களாக மாறினோம். அதனால்தான் அதனைக் கட்டுப்படுத்த முடிந்தது. கரோனா முடிவதற்கும் முன்னதாகவே வெள்ளம் வந்துவிட்டது. பெரிய மழை வந்துவிட்டது. அதையும் சமாளித்து வெற்றிபெற்று வந்தோம்.

 

இப்பொழுது பெரிய புயல் வந்தது. புயலையே சந்திக்கிற ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது என்றால் இதைத்தான் கலைஞர் சொல்லிவிட்டு சென்றார் 'உழைப்பு... உழைப்பு... உழைப்பு... உழைப்பு தான் நமது மூலதனமாக இருக்க வேண்டும். அதைத்தான் ஸ்டாலின் இடத்தில் நான் பார்க்கிறேன்' என்று சொன்னாரே அந்த உழைப்பைப் பயன்படுத்தி தான் நான் மட்டுமல்ல, அமைச்சர்கள் மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமல்ல, நமது கழகத் தோழர்கள், இந்த இயக்கம் வளர வேண்டும் வாழ வேண்டும் என்று அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருக்கின்ற உடன்பிறப்புகள் அவர்களும் இதில் இணைந்து கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் கம்பீரமாக மக்களிடத்தில் செல்ல முடிகிறது.

 

நேற்றிலிருந்து ஃபோனை கீழே வைக்கவே முடியவில்லை. எல்லா இடத்திலிருந்தும் ஃபோன் செய்து 'ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள்.. ரொம்ப சிறப்பாக செய்து விட்டீர்கள்...' என சோசியல் மீடியாக்களில் எல்லாம் பாராட்டுக்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. இங்கு மகேஷ் பொய்யாமொழி கூட சொன்னார் 'நம்பர் ஒன் முதலமைச்சர்' என்று பாராட்டினார். நம்பர் ஒன் முதலமைச்சர் என்று என்னை சொல்வதில் எனக்கு எந்த பெருமையும், பாராட்டும் இல்லை. என்று நம்பர் ஒன் தமிழ்நாடு என்று வருகிறதோ அன்றைக்குத்தான் பெருமைப்படுவேன். அதையே நிறைவேற்றுவான் இந்த ஸ்டாலின் என்று உறுதியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்