வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற வேட்பாளர் வில்வாதனை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின், மார்ச் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி மார்ச் 22-ம் தேதி மோட்டுக்கொல்லை, பைபாஸ் சாலை உள்ளிட்ட 4 இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
அங்கு அவர் பேசும்போது, கடந்த நான்கரை ஆண்டில் தமிழகம் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடைந்த போது பிரதமரிடம் தமிழக அரசு நிவாரணம் கோரியது. அப்போது எல்லாம் கேட்ட தொகையில் பத்து சதவீதம் கூட வழங்கவில்லை. ஆனால் சர்தார் வல்லபாய் படேலுக்கு 3 ஆயிரம் கோடியில் சிலை அமைத்துள்ளார் மோடி. சிலை பராமரிப்பு செய்த உழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. சிலையை விட தமிழக மக்கள் எந்த விதத்தில் குறைவானவர்கள் என கேள்வி எழுப்பினார்.
பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பு ஊழியர்களுக்கும் மூன்று மாதமாக ஊதியம் வழங்கவில்லை, மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஒரு திவாலான ஆட்சி என்று கூறலாம். பணமதிப்பிழப்பு என்று சொல்லி இரவு 12 மணிக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டார். இதனால் நாம் அனைவரும் ஏ.டி.எம் வாசலில் நின்று இந்தியா முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இதனால் மோடி அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் ஏப்ரல் 18 என்று மக்களுக்கு நினைவு கூறுவோம். ஒவ்வொரு முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லும் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தற்போது தேர்தல் அறிக்கையில் சொல்லியவற்றை நிச்சயம் செய்யும். தேர்தல் அறிக்கையில் கூறியது போல் நேத்ராவதியை பாலாற்றில் இணைக்க திட்டத்தை நிறைவேற்றுவோம். அதேபோல் ஆம்பூர் ரட்டி தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைப்போம் என்றார்.
ஒரு படத்தில் கதாநாயகன் இருந்தால், ஒரு வில்லன் இருப்பான். அந்த வில்லன் தான் மோடி. வில்லன் உடன் இரண்டு கைத்தடிகள் இருப்பார்கள் அவர்கள் தான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம். தமிழ் நாட்டில் ஆட்சியை காப்பாற்றி கொள்ள மோடியிடம் அடிமையாக உள்ளனர். அவர்களை விரட்டி அடிக்க நேரம் வந்துவிட்டது. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தமிழகத்தில் அம்மா ஆட்சி நடைபெறுவதாக கூறி வருகின்றனர். ஆனால் மருத்துவமனையில் இருந்த போது அம்மா இட்லி சாப்பிட்டார், சட்னி தொட்டு சாப்பிட்டாங்கோ என்று கூறியவர்கள் அந்த அம்மா எப்படி இறந்தார்கள் என்று சொல்லவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தபின் நிச்சயம் அதற்கான விடையை திமுக கண்டறிந்து தரும் என்று அவர் பேசினார்.