விருத்தாச்சலத்தில் புதிய ஒன்றிய சேர்மனுக்காக நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வென்ற பின் திமுகவில் சேர்ந்த கவுன்சிலர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
கடந்த 2019 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 19 வார்டுகளில் அ.தி.மு.க 5, தி.மு.க 4, பா.ம.க 4, சுயேச்சை 4, பா.ஜ.க 1, தே.மு.தி.க 1 என வெற்றி பெற்றதில் அ.தி.மு.கவை சேர்ந்த செல்லத்துரை ஒன்றியக்குழு தலைவராகவும், பா.ம.கவை சேர்ந்த பூங்கோதை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் கடந்த ஆண்டு கரோனாவால் மு.பரூர் அ.தி.மு.க கவுன்சிலர் மல்லிகாவும், அவரது கணவர் பாலதண்டாயுதமும் உயிரிழந்தனர். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.கவை சேர்ந்த மதியழகன் வெற்றி பெற்றார். அதையடுத்து தி.மு.க கவுன்சிலர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. அ.தி.மு.க கவுன்சிலர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. இதனால் அ.தி.மு.க சேர்மன் செல்லத்துரை பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அ.தி.மு.கவை சேர்ந்த செல்லத்துரை மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் தனம் சிவலிங்கம் ஆகியோர் தி.மு.கவில் இணைந்தனர். அதையடுத்து அ.தி.மு.க ஒன்றிய குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது.
இந்நிலையில் கடந்த 21.12.2021 அன்று தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 15 பேர் மக்களின் நலனுக்கு எதிராகவும், தமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், பஞ்சாயத்து சட்டங்களுக்கு விரோதமாக நடந்து வருவதாகவும், ஒன்றியக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை ஒன்றியக்குழு தலைவர் இழந்து விட்டதால் செல்லத்துரைக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மனுவினை விருத்தாச்சலம் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் அளித்தனர். அதனடிப்படையில் கடந்த 05.03.2022 அன்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்பிக்கை இல்லா தீர்மான மனு மீது ரகசிய ஓட்டெடுப்பு நடைபெற்றது. கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 19 உறுப்பினர்களில் சேர்மன் செல்லத்துரைக்கு எதிராக 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வாக்களித்ததால் ஒன்றிய சேர்மன் செல்லதுரை பதவி இழந்தார்.
இந்நிலையில் புதிய ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நேற்று நடைபெற்றது.
இத்தேர்தலில் விருத்தாச்சலம் ஒன்றியத்துக்குட்பட்ட அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, சுயேச்சைகள், தி.மு.க உள்ளிட்ட 19 ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இத்தேர்தலில் தி.மு.கவை சேர்ந்த செல்லத்துரையை எதிர்த்து, தேர்தல் நேரத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற பின் திமுகவில் இணைந்த வேட்பாளரான மலர் என்பவரும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதில் மலர் 16 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றதால், விருத்தாச்சலம் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் செல்லதுரைக்கு 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
ஆட்சி மாறியதும் ஒன்றிய குழு தலைவர் பதவியை தக்க வைப்பதற்காக அ.தி.மு.கவிலிருந்து தி.மு.கவுக்கு தாவிய செல்லத்துரையை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு பின்னர் தி.மு.கவில் சேர்ந்த மலர் வெற்றி பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.