திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த முன்னாள் தலைவர் தங்கராஜ் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த இ.பெரியசாமி, “தமிழகத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பலரும் தி.மு.க.வில் அதிக அளவில் இணைந்து வருகின்றனர். அதற்குக் காரணம் தமிழர்களின் நலன் காக்கும் ஒரே இயக்கம் தி.மு.க. தான்” என்றார்.
இதுபோல சித்தரேவு 2 -ஆவது வார்டை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கருப்பையா, மாடசாமி, சுப்பிரமணி உட்பட பலரும் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஆத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் சி.ராமன், அய்யம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் அய்யப்பன், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கருத்தராஜா உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். தி.மு.க.வில் இணைந்தது குறித்து ஆத்தூர் ஒன்றிய பா.ஜ.க முன்னாள் தலைவர் தங்கராஜ் கூறுகையில், “பா.ஜ.க கட்சி தனித்தன்மையை இழந்துவருகிறது. கரோனா காலத்தில் ஆத்தூர் ஒன்றியத்தில் பா.ஜ.க சார்பாக எந்த ஒரு நிவாரணமும் முறையாக வழங்கப்படவில்லை. தி.மு.க.வைச் சேர்ந்த இ.பெரியசாமி அவர்கள்தான் கரோனாவை பற்றி பயப்படாமல் கிராமம் கிராமமாகச் சென்று தூய்மைப் பணியாளர்கள் முதல் ஆட்டோ தொழிலாளர் உட்பட அனைவருக்கும் வீடு தவறாமல் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கினார். ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வினர் கூட இவரைப்போல் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவில்லை. மக்களுக்கு நன்மை செய்யாத கட்சியில் இருப்பது பயனில்லை என்ற காரணத்தால் நான் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி அவர்கள் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தேன்” என்றார். இதுபோல சித்தரேவைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து விலகி இ.பெரியசாமி அவர்கள் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து கொண்டனர்.