குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நாடு முழுக்க இடைவெளியில்லாமல் நடந்து வருகிறது. இன்று தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட்டு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியது.
அதேபோல் தமிழகத்தில் பல ஊர்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். ஈரோட்டில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் இன்று காலை முற்றுகையிட்டனர். இதனால் ஈரோட்டில் உள்ள முக்கிய சாலையான பெருந்துறை சாலை மேட்டூர் சாலை பிரப் ரோடு ஆகியவை போக்குவரத்து நெரிசலால் திணறியது.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தக் கூடாது, மத்திய பா.ஜ.க.மோடி அரசே மதரீதியாக மக்களை பிரிக்காதே என பல்வேறு கோஷங்களை எழுப்பி சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டு அதன் பிறகு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுவாக அமைதியான முறையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நிறைவடைந்தது.