திமுகவின் அரசியல் நடவடிக்கைகளை அச்சுறுத்தத் துவங்கியிருக்கிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. இதற்காக, திமுகவின் மூத்த நிர்வாகிகளை குறிவைத்து வழக்கு, கைது என்கிற ஆயுதங்களை தூக்கியுள்ளது காவல்துறை!
இந்த நிலையில் இதனை எதிர்கொள்வதற்காக கட்சியின் மா.செ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசிக்கும் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்தினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எடப்பாடி அரசின் எதேச்சதிகார போக்கினையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் சுட்டிக் காட்டியதோடு, ’’திமுகவினருக்கு எதிராக வழக்குப்போடுவதும் கைது செய்வதும் காவல்துறை அதிகாரிகளுக்கு இனிப்பாக இருக்கலாம். அது, கசப்பாக மாறும் காலம் விரைவில் வந்தே தீரும்’’ என்றிருக்கிறார். மேலும், அமைச்சர் வேலுமணிதான் தமிழக காவல்துறையை ஆட்டிப்படைப்பதாகவும் கூட்டத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார் ஸ்டாலின்.
இதனையடுத்துப் பேசிய பலரும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளோடு நடக்கும் எடப்பாடியின் காவல்துறையை கண்டிக்கும் வகையிலும், இதற்கெல்லாம் நாம் பயந்துவிடப்போவதில்லை என்றும், சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் பேசினர். இதனையடுத்து, திமுகவிற்காக உழைக்கும், போராடும் ஒவ்வொரு தொண்டரையும் பாதுகாக்க திமுக நடத்தும் நேரடியான போராட்ட களத்தை அதிமுக சந்திக்க நேரிடும். அதிமுக அரசின் ஊழல்களை மாவட்டங்கள் வாரியாக அம்பலப்படுத்த மாவட்டம் தோறும் வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார் மு.க.ஸ்டாலின்.