
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக சமவாய்ப்பு பிரிவு சார்பில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை மூலம் துவக்கப்பட்ட வள்ளலார் மற்றும் ராமசாமி அறக்கட்டளை கல்வி உதவித் தொகை பாராட்டு சான்று வழங்கும் விழா நடைபெற்றது. அதோடு திருப்பனந்தாள் காசி மடம் மூலம் தொடங்கப்பட்ட தமிழ் வளர்ச்சிக்கான அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, அண்ணாமலைப் பல்கலைக்கழக நிதி உதவியுடன் வழங்கப்படும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இவ்விழாவுக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தி. அருட்செல்வி தலைமை தாங்கினார். சமவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்குக் கல்வி உதவித்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “மாணவர்கள் படிக்கும் போதே தனக்கு என ஒரு இலக்கை நிர்ணயித்து அதன் மூலம் பயணித்தால்தான் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும்.
படிக்கும் போதே உங்களுடைய தனித்திறமை மற்றும் இலக்கு என்னவென்று திட்டமிட்டுச் செயல்படுவதோடு தங்களுடைய இலக்கை அடையும் வரை எத்தனை முறை தோல்வி வந்தாலும் மனம் தளராமல் விடாமுயற்சியோடு கடினமாக உழைத்தால்தான் வெற்றி அடைய முடியும். மாணவர்கள் கல்வியை முடித்து பட்டம் பெற்றதோடு விட்டுவிடாமல் வேலைக்குச் செல்லும் அடுத்த இலக்கு என்ன என்று திட்டமிட்டு மேன்மேலும் வளர்ச்சியடைய உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்ளவேண்டும்” என்று பேசினார்.
விழாவில் வள்ளலார் அறக்கட்டளை சார்பாக 42 மாணாக்கர்களுக்கும், இராமசாமி அறக்கட்டளை சார்பாக 42 மாணாக்கர்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம், காசி மடம் அறக்கட்டளை சார்பாக 48 மாணாக்கர்களுக்கு தலா ரூ.1000யும் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிதியிலிருந்து 73 ஆராய்ச்சியாளர்களுக்கு வருடத்திற்கு தலா ரூ. 26 ஆயிரம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் மு.பிரகாஷ் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷண்குமார், புல முதல்வர்கள் விஜயராணி, குலசேகரப்பெருமாள், பாரி, ஸ்ரீராம், கோதைநாயகி, கல்விசார் இயக்குநர்கள் முல்லைநாதன், ரகுபதி, சேர்க்கைப்பிரிவு இயக்குநர் பாலபாஸ்கர் பல்வேறு இயக்குநரகத்தின் இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் ரத்தினசம்பத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.