
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனைச் சமாளிக்கும் விதமாக மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து உத்தரவிட்டது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலையை ரூ. 50 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையானது 500 ரூபாயில் இருந்து 550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் சிலிண்டரை பெறுபவர்களுக்கு 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விலை உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?. ‘உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்’ என்பது, சாடிஸ்ட் பாஜக (Sadist BJP) அரசுக்கு மிகவும் பொருந்தும்.
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது. மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது. இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. ஒன்றிய பாஜக அரசே...தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக” எனத் தெரிவித்துள்ளார்.