
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனைச் சமாளிக்கும் விதமாக மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து உத்தரவிட்டது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே சமயம் பெட்டோல் மற்றும் டீசல் மீதான விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலையை ரூ. 50 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையானது 500 ரூபாயில் இருந்து, 550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் சிலிண்டரை பெறுபவர்களுக்கு 803 ரூபாயில் இருந்து 853 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமையல் எரிவாயு விலை ரூ. 50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல் ஆகும்.எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 818.50 லிருந்து ரூ.868.50 ஆக அதிகரித்திருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதற்காக மத்திய அரசால் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும். உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 60 டாலர் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பு ஈடு செய்யப்பட்டு விட்டதால், பெட்ரோல், டீசல் விலைகள் விரைவில் குறையக்கூடும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கடந்த வாரம் கூறியிருந்தார். ஆனால், அதற்கு மாறாக சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பது நியாயமல்ல.
அதேபோல், கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விற்பனையின் லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதை நுகர்வோருக்கு வழங்காமல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதன் மூலம் மத்திய அரசே அதை எடுத்துக் கொண்டதும் தவறு ஆகும். எண்ணெய் நிறுவனங்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவை. அவை மக்களைச் சுரண்டக் கூடாது. அதேபோல், மத்திய அரசும் மக்களுக்கு கிடைக்க வேண்டிய விலைக் குறைப்பு நன்மையை தானே எடுத்துக் கொள்ளக் கூடாது. சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல், கலால்வரி உயர்வை திரும்பப் பெறுவதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்தது ரூ.2 குறைவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.