Skip to main content

RCB vs MI : மும்பையை வீழ்த்தியது பெங்களூரு அணி!

Published on 07/04/2025 | Edited on 07/04/2025

 

RCB vs MI: Bengaluru beat Mumbai

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 20வது போட்டி, மும்பை கிரிக்கெட் மைதானத்தில் இன்று (07.04.2025) இரவு நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பு 221 ரன்களை குவித்தது.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 42 பந்துகளில் 67 ரன்களையும், ராஜத் படிடார் 32 பந்துகளில் 64 ரன்களையும், ஜித்தேஷ் ஷர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 40 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் வெற்றி பெற மும்பை அணிக்கு 222 ரன்களை பெங்களூர் அணி இலக்காக  நிர்ணயித்தது. எனவே 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. இருப்பினும் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். மேலும் சூர்ய குமார் யாதவ் 26 பந்துகளில் 28 ரன்களையும் குவித்தார். எனவே மும்பை அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. அதே சமயம் அனைத்து விதமான டி20 போட்டிகளிலும் 13 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி இன்று படைத்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் தனது 2வது அதிகபட்ச ரன்களை பெங்களூரு அணி இன்று பதிவு செய்தது. முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக, ஒரு விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை பெங்களூரு அணி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.