நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக நேற்று (10.06.2024) அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு இடம் அளித்துள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடபட்டுள்ளப் பதிவில், “கட்சிக்காகப் பரம்பரை பரம்பரையாகப் போராடி, சேவை செய்து, தியாகம் செய்யும் மரபைக் குடும்ப அரசியல் என்று மோடி விமர்சித்தார். ஆனால் மோடி தற்போது அதிகாரத்தின் விருப்பத்தை தங்கள் அரச குடும்பத்துக்கு பகிர்ந்தளித்துள்ளார். இதுதான் மோடியின் பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில், “முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் எச்டி குமாரசாமி, முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பேரன் ஜெயந்த் சவுத்ரி, பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர் மகன் ராம் நாத் தாக்கூர், ஹரியானா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங் மகன் ராவ் இந்தர்ஜித் சிங், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் பேரன் ரவ்னீத் சிங் பிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியா மகன் ஜோதிராதித்ய சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான்” ஆகியோர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “முன்னாள் மத்திய அமைச்சர் யெரன் நாயுடு மகன் ராம் மோகன் நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் மகன் பியூஷ் கோயல், முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மகன் தர்மேந்திர பிரதான், அருணாச்சல் பிரதேசத்தின் முதல் இடைக்கால சபாநாயகர் ரிஞ்சின் காரு மகன் கிரண் ரிஜிஜு, மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் எம்.பி. மற்றும் அமைச்சர் ஜெய்ஸ்ரீ பானர்ஜி மருமகன் ஜேபி நட்டா, உத்தப்ரபிரதேச முன்னாள் எம்.பி. ஜிதேந்திர பிரசாத் மகன் ஜிதின் பிரசாத், உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங் மகன் கீர்த்தி வர்தன் சிங்” ஆவார்.
அதே போன்று, “பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அப்னா தளம் கட்சியின் நிறுவனர் சோனேலால் படேல் மகள் அனுப்ரியா பட்டேல், மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஏக்நாத் காட்சே எம்.எல்.ஏ, மருமகள் ரக்ஷா காட்சே, உத்தரபிரதேச மக்களவை வேட்பாளர் ஓம் பிரகாஷ் பாஸ்வான் மகன் கமலேஷ் பாஸ்வான், மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாக்கூர் மகன் சாந்தனு தாக்கூர், மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் கௌரிசங்கர் ஷெஜ்வார் மைத்துனர் வீரேந்திர குமார் காடிக், பீகார் முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் பிரசாத் யாதவ் மனைவி அன்னபூர்ணா தேவி” எனப் பல்வேறு பெயர்களைச் சுட்டிக்காட்டியுள்ளார்.