
நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில், வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா, மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மதிமுக எம்.பி வைகோவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய உத்தரப் பிரதேச எம்.பி சுதான்ஷு திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் மதிமுக எம்.பி வைகோ, உத்தரப் பிரதேச எம்.பியின் கருத்தை எதிர்த்து ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று எழுந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ஒரு நிமிஷம் இருங்கப்பா...’ என்று வைகோவை பார்த்து கூறிவிட்டு அவைத் தலைவரை நோக்கி, “அவர் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருக்கிறார். ஆனால் அவர் சொன்ன ஒரு வரி மிகவும் ஆட்சேபனைக்குரியது. அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன். நீ தமிழ்நாட்டுல கால் வை பாக்குறேன். நீ தமிழ்நாட்டுல் நுழுஞ்சுடுவியா நான் பாக்குறேன் அப்படியென்று அவர் பேசுகிறார். இது ரொம்ப தப்பு... நீங்க அப்படி சொல்லக் கூடாது. நீங்க அப்படி பேசுறது ரொம்பவே தப்பு.. இந்த நாட்டுல யார் வேண்டுமானாலும் எங்க வேண்டுமானாலும் கால் வைப்போம். யாருக்கு அதிகாரம் இல்லை” என்று ஆவேசமாகப் பேசினார்.