
இஸ்லாமியர்கள் சொத்துக்களை நிர்வகிப்பதற்கு சட்டப்பூர்வ அமைப்பான வக்ஃப் வாரியத்தில், இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோரை இடம்பெறச் செய்வது, வக்ஃப் நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் மாற்றுவது உள்ளிட்ட சட்டத்திருத்தங்களை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்கப்பட்டது. அந்த கூட்டுக்குழுவில் இடம்பெற்ற திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு மத்திய பா.ஜ.க அரசு சில தினங்களுக்கு முன்பு வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் அந்த சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாக, வக்ஃப் சொத்துக்களாக அறிவிக்கப்பட்ட சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.
கிராம குளங்கள், நிலங்கள் என ஏராளமான சொத்துக்கள் சட்டவிரோதமாக வக்ஃப் சொத்துக்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை அடுத்து, எத்தனை சொத்துக்கள் இது போன்று அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய மாநில வருவாய் துறை மாநிலத்தில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில், பாரபங்கி, சீதாப்பூர், பரேலி, சஹாரன்பூர், பிஜ்னோர், முசாபர்நகர், மொராதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக வக்ஃப் சொத்துக்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும், மாநில வருவாய்த் துறையின் பதிவுகளில் 2,963 வக்ஃப் சொத்துக்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், பதிவு செய்யப்படாமல் 1.30 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்கள் சட்டவிரோதமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால், வக்ஃப் மசோதா விதிகள்படி, அந்த சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க மாவட்ட நீதிபதிகள் அறிக்கை சமர்பிக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.