Skip to main content

முதலாம் பராந்தகச் சோழர் கால  கற்றளிக் கோயில் கல்வெட்டுகள் சிற்பங்கள் கண்டுபிடிப்பு

Published on 01/04/2025 | Edited on 01/04/2025

 

முதலாம் பராந்தகச் சோழர்  காலத்தில் எழுப்பிய 1100 ஆண்டு பழமையான கற்றளிக் கோயில் கட்டுமானங்கள் கல்வெட்டுகள் சிற்பங்கள் புதுக்கோட்டை   பெருங்களூர் அருகே மாந்தாங்குடி கிராம எல்லையில் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே, புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையருகே மாந்தாங்குடி எடுத்தடிமேட்டில்  முதலாம் பராந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் எழுப்பப்பட்ட கற்றளிக்கோவிலின் சிற்பங்கள், கட்டுமான சிதிலங்கள், கல்வெட்டுகள் ஆகியன புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு மாந்தாங்குடியைச் சேர்ந்த சங்கர் மற்றும் செல்வநாதன் அளித்த தகவலையடுத்து மாந்தாங்குடி பகுதியில்  தொடர் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல பெருங்களூர் மங்களநாயகி கோவில் கட்டுமானத்தில் உள்ள கல்வெட்டுகள் குறித்து அவ்வூரைச் சேர்ந்த புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவைச் செயலாளர் மாரிமுத்து   அளித்த தகவலைத் தொடர்ந்து  அந்தக் கோவிலில் 24 கல்வெட்டுகள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் தலைவர் கரு.ராஜேந்திரன்  உதவியுடன் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டது.

மேற்கண்ட இரண்டு இடங்களிலும்  தொடராய்வு மேற்கொண்டதன் விளைவாக மாந்தாங்குடியில் சிதிலமடைந்து காணப்படும்  கற்றளியின் கற்கள் மூலம்  பெருங்களூர்  அம்மன் சன்னதி   கட்டப்பட்டுள்ளதை   உறுதி செய்துள்ளோம். மேலும்    மாந்தாங்குடி மற்றும் பெருங்களூர் கல்வெட்டுக்களை ஒப்பு நோக்கும் போது ஒரே காலத்தவை  என்பதும் முதலாம் பரந்தகச் சோழரின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டவை என்பதும்  உறுதி செய்ய முடிகிறது.

முதலாம் பராந்தக சோழர்  "மதுரை கொண்ட" கோப்பரகேசரி என்ற பட்டம் பெறுவதற்கு முன்பாக மூன்றாவது ஆட்சியாண்டின் முற்பகுதியில்  செம்பியன் இந்தவதி அரையன் என்பார் எழுப்பியதை பெருங்களூர் அம்மன் சந்நிதியின்  மேற்கு சுவற்றில் கட்டப்பட்டுள்ள  துண்டு கல்வெட்டு மூலம்  அறிய முடிகிறது.

மாந்தாங்குடி பராந்தகச்சோழர் கால சிற்பங்கள்:

மாந்தாங்குடி கருவேலங்காட்டுப்பகுதியில் முற்கால சோழ கலைப் பாணியில் அமைந்த சிற்பங்களில் அறிவீஸ்வரர் சிற்பம் தனித்துவமிக்கதாக உள்ளது, ஜடா மகுடத்துடன், ஞான முத்திரையை  கொண்டிருக்கும் இறைவன், இராஜலீலாசனத்தில் அமர்ந்தவாறு , அகமே கடவுளெனும் தியான நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. இது அத்வைத கோட்பாட்டுடன் ஒத்துப் போகிறது. இத்துடன் தாமரை வடிவிலான லிங்கத்தின் ஆவுடைப்பகுதி, முற்கால சோழர் கலைப்பாணியில் முருகன், துர்க்கை, பிரம்மா மற்றும் இடுப்பளவு உடைந்த நிலையில் ஒரு சிற்பம், மூன்று நந்தி சிற்பங்கள், கற்றளித் தூண்களின் அடிமானம், கோட்டத்தின் கருக்கு வேலைப்பாடுகள், கூரையின் யாளி வரிசை, பத்ம வரியில் பொறிக்கப்பட்ட ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டின் துண்டுப் பகுதி ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெருங்களூரில் கற்றளி சிற்பங்கள்:

மாந்தாங்குடி அழிந்த கற்றளி கோபுரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட இரண்டு சிற்பங்கள் தற்போது பெருங்களூர் கோவிலின் அம்மன் சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன. இவை மார்பில் ஒரு கையை வைத்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. இது புதிய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும்.

கல்வெட்டில் பண்பாட்டு தொடர்ச்சி:

மஞ்சள் தீர்த்தமாடும் நிகழ்வு நடந்தது குறித்து கல்வெட்டு பொறிக்கப்படுள்ள நிலையில்,  இன்றளவும் அக்னியாற்றில் மஞ்சள் நீராடும் வழக்கம் இருந்து  வருவது ஆயிரத்து நூறு ஆண்டுகளாக தொடரும் பண்பாட்டு தொடர்ச்சியையும் பார்க்க முடிகிறது.

கல்வெட்டில்  தாவர புவியிடக்குறியீடுகள்:

பெருங்களூர் கல்வெட்டுகள் புவியியல் அடையாளமாக ஆலஞ்செய், உசிலந்துடவை, வேப்பஞ்செய், வேலந்துடவை இலந்தந்துடவை, புளியஞ்செய், என தாவரங்கள்புவியிட அடையாளமாக பயனாகியுள்ளன.  

கல்வெட்டில் அளவைகள்:

தங்கம் கழஞ்சு அளவையிலும், நிலம் தடி அளவையிலும், தூழி  தூணி , குறுணி, எனும் அளவைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

தொடராய்வின் போது  புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவையின் செயலாளர் மாரிமுத்து, புதுக்கோட்டை கலைஞர் கலை அறிவியல் கல்லூரி வரலாற்று துறை இணைப்பேராசிரியர் சீ.நீலாவதி , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக துணைத் தலைவர்கஸ்தூரி ரங்கன், துணைச் செயலாளர் பீர்முகமது, ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உறுப்பினர் மஸ்தான் பகுருதீன் பங்கேற்றனர். மேலும் உள்ளூர் பொதுமக்கள்  ஆர்.ரவி ராகுல் பி.சிவசுப்பிரமணியன் எஸ்.ராமுராமராஜன் வி.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.