
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஜாவேத் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதே சமயம் நீலகிரி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வக்பு சட்ட திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் நீலகிரி எம்பியும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ. ராசா அரை மணி நேரத்திற்கு மேலாக நெருப்பு போல பேசினார். மாநிலங்களவையில் திருச்சி சிவா 20 நிமிடத்திற்கு மேலாக உணர்ச்சிப்பூர்வமாக முழங்கி இருக்கிறார். அடுத்த நாளே சட்டமன்றத்திற்கு வரும் பொழுது கருப்பு பட்டை அணிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அது மட்டுமல்ல திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடர்வோம் என சட்டமன்றத்திலேயே அறிவித்திருக்கிறோம். நாளை (அதாவது இன்று - 07.04.2025) ஆ.ராசா பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வக்ஃப் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொட்ர்பாக அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வக்ஃப் திருத்தச் சட்டம், 2025யின்னை எதிர்த்து திமுக சார்பில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் வக்ஃப் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினருமான ஆ. ராசா, மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் எம்.பி மூலம் இன்று (07.04.2025), உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், ’ ‘தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
வக்ஃப் திருத்த மசோதா 2025 அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை மோசமாக பாதிக்கும் என்பதால், அதை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, மார்ச் 27, 2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் ஒரு தீர்மானத்தை திமுக அரசு நிறைவேற்றியது. வக்ஃப் திருத்த மசோதா 2025, நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாகக் கருத்தில் கொள்ளாமலும் இச்சட்டதிருத்தம் நிறைவேற்றிட பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் திமுக எம்.பி.க்கள் எழுப்பிய கருத்துகளும் பரிசீலிக்கப்படவில்லை.

வக்ஃப் (திருத்தம்) சட்டம் - 2025, 06.04.2025 அன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும், இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் முஸ்லிம்களின் உரிமைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளையும் மீறுகிறது மற்றும் பாரபட்சம் காட்டுகிறது என்பதையும் கருத்தில் கொண்டு, 2025 ஏப்ரல் 6 அன்று அமலுக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் - 2025யினை ரத்து செய்ய வேண்டுமென தி.மு.க. சார்பில் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா, எம்.பி. மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் மூலம் ரிட் மனுதாக்கல் செய்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.