கடலூரில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7ல் நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாராட்டு, சட்டமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக நடந்த அராஜகத்துக்கு கண்டனம், ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது கால்வாய் திட்டம் அமைக்க வலியுறுத்தல், காசி தமிழ்ச் சங்கமம் தந்த பிரதமர் மோடிக்கு பாராட்டு, புதுக்கோட்டை இறையூர் சம்பவத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வலியுறுத்தல், தமிழக பெண் இனத்தை பாதுகாக்கத் தவறிய திமுக அரசுக்கு கண்டனம், விவசாயிகளையும் நெசவாளர்களையும் வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம், திராவிட மாடல் ஊழல் ஆட்சியால் தொழில் வளர்ச்சியில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு, பாஜக தேசியத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழுக் கூட்டம் முடிவடைந்த பின் பாஜக நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து மாநிலத் தலைவர் விரைவில் அறிவிப்பார். நிச்சயமாக திமுக ஆதரிக்கிற வேட்பாளரைத் தோற்கடிக்கக் கூடிய முயற்சியில் பாஜக இறங்கும். அதை எப்படிச் செய்வது என்பதைக் குறித்து மூன்று நாட்களில் முடிவு எடுக்கப்படும்” எனக் கூறினர்.