தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்...
''மகளிருக்குப் பாதிக்குப் பாதி இடங்கள் தற்பொழுது ஒதுக்கியுள்ளார்கள். அதிலும் ஒரு சிக்கல் வந்துள்ளது. நிறைய இயக்கங்களில் இருக்கக்கூடிய முக்கிய நபர்கள் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு புதிய சூழல் இருப்பதால் பேச்சுவார்த்தை ஒரு சில மாவட்டங்களில் முடியாமல் இருக்கிறது. ஆனால் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். சென்னையைப் பொருத்தவரை மட்டுமல்ல எங்களுடைய எதிர்பார்ப்பு என்பது ஒவ்வொரு மாவட்டங்களைப் பொறுத்தவரை நாங்கள் குறைந்தபட்சம் எதிர்பார்த்திருக்கிறோம். அதை திமுக தலைமை தான் கடைசியில் முடிவு செய்வார்கள். கண்டிப்பாக எதிர்பார்த்த முடிவுகள் வரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
நாங்கள் சொல்லும் எண்ணிக்கைக்கும் அவர்கள் கொடுக்கும் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பதால் தான் இதுவரை பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இருப்பினும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை கடந்த மூன்று ஆண்டு காலமாக நாங்கள் அவர்களுடன் பயணித்து வருகிறோம். முதல்வர் உண்மையிலேயே தாயுள்ளத்தோடு தான் தேர்தல் நேரத்தில் சீட்டுகளை ஒதுக்கியுள்ளார். அதே நேரத்தில் கேட்கும் இடம் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. வைகோவைவிட துரை வைகோ அதிகமாக எதிர்பார்க்கிறார் என்பது உண்மை கிடையாது. வைகோவை விட எனக்கு அனுபவம் கிடையாது. ஆனால் கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய நபர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் ஆசைப்படுவதும் தப்பும் கிடையாது. அதை நிறைவேற்றி வைக்கக் கூடிய கடமை தலைமைக்கு இருக்கிறது'' என்றார்.