சமீபத்தில் திமுக முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த டி.ஆர்.பாலு அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு , அவருக்கு பதிலாக திமுக முதன்மை செயலாளராக கே.என்.நேரு நியமிக்கபடுவதாக திமுக தலைமை அறிவித்தது. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தின் 14 இடங்களையும் திமுக கைப்பற்றியதால் கே என் நேருவிற்கு முதன்மை செயலாளர் பதவியை ஸ்டாலின் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அன்பிலார் என்று அழைக்கப்பட்ட மறைந்த அன்பில் தர்மலிங்கத்தின் பேரனான அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ., இப்போது திருச்சியின் மூன்று மா.செ.க்களில் ஒருவராக நியமிக்கப்பட்டதால், அவரிடம் இருக்கும் இளைஞர் அணி துணைச் செயலாளர் பொறுப்பை டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி தொகுதியின் ஆக்டிவான எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு கொடுப்பதற்கு திமுக தலைமை தயாராகி வருவதாக சொல்கின்றனர். இந்த நிலையில், மாவட்ட அரசியலிலிருந்து மாநில பொறுப்புக்கு வந்திருக்கும் மாஜி மந்திரியான கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தில் தன் பிடிமானம் தளரக்கூடாது என்பதற்காக தன் மகனான அருணின் வளர்ச்சியில் அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.